`அரிசி வியாபாரத்தில் 2 ரூபாய் லாபம்!’ - விப்ரோ நிறுவனத்தின் கதையைப் பகிரும் அசிம் பிரேம்ஜி!
விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி தனது தாத்தா தொடங்கிய அரிசி வியாபாரத்தில் வாரம் 2 ரூபாய் ஈட்டியதாகவும், 75 ஆண்டுகளில் அந்த நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி தனது தாத்தா தொடங்கிய அரிசி வியாபாரத்தில் வாரம் 2 ரூபாய் ஈட்டியதாகவும், 75 ஆண்டுகளில் அந்த வியாபார நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாறியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்டுள்ள `The Story of Wipro' என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வில் காணொளி மூலம் பேசியுள்ள அசிம் பிரேம்ஜி, தனது தாத்தா தொடங்கிய வியாபாரம் குறித்தும், விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் பேசியுள்ளார்.
வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள `The Story of Wipro' புத்தகம் விப்ரோ நிறுவனம் காய்கறி எண்ணெய் விற்பனையில் தொடங்கி, தற்போது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விப்ரோவின் மற்றொரு நிறுவனரான ரிஷாத் பிரேம்ஜி, இந்தப் புத்தகம் அசிம் பிரேம்ஜியின் கதையையும் உள்ளடக்கியதாகத் தெரிவித்துள்ளார். 75 ஆண்டுக் கால விப்ரோ நிறுவனத்தின் கதையில், அதன் தலைமைப் பொறுப்பில் சுமார் 53 ஆண்டுகள் இருந்தவர் அசிம் பிரேம்ஜி.
`எனது தாத்தாவின் வளர்ச்சிக்குக் காரணம், அவரது நேர்மை. அவருக்குப் பின், எனது தந்தை முகமது ஹுசைன் ஹஷம் பிரேம்ஜி இந்த நிறுவனத்தைத் தனது 21 வயதில் கவனிக்கத் தொடங்கினார்’ என்று கூறியுள்ளார் அசிம் பிரேம்ஜி. அவரது தாய் குல்பானூ பிரேம்ஜி குழந்தைகளுக்கான மருத்துவமனையைக் கட்டுவதற்காகக் கடுமையாகப் போராடியதாகவும் தெரிவித்துள்ளார்.
`நான் எனது தாயிடம் தான் பலவற்றையும் கற்றுக் கொண்டேன். அவர் மருத்துவர் என்பதால், தனது நேரம் முழுவதையும் மாற்றுத் திறனாளிகளாகப் பிறந்த குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையைக் கட்டுவதற்கான பணிகளில் செலவிட்டார். அப்போது நாங்கள் அவ்வளவு வசதியானவர்களாக இல்லையென்ற போது, அவர் டெல்லிக்குச் சென்று, நிதி பெறுவதற்காக அரசிடமும், பெரிய தொழிலதிபர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவார். ஏதேனும் ஒன்றிற்காகத் தொடர்ந்து நிற்பதும், அதற்காகத் துவண்டுவிடாமல் இருப்பதும் என்னுள் சிறுவயதிலேயே உருவானதற்கு அவர் தான் காரணம்’ என அசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
1945ஆம் ஆண்டு, அசிம் பிரேம்ஜியின் தந்தை முகமது ஹுசைன் ஹஷெம் பிரேம்ஜி மகாராஷ்ட்ராவில் வெஸ்டெர்ன் இந்தியா ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, காய்கறி எண்ணெய்த் தயாரிப்பில் ஈடுபட்டார். 1966ஆம் ஆண்டு, அவரது மரணத்திற்குப் பின், அசிம் பிரேம்ஜி ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வியை நிறுத்தி, வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது அப்பாவையும், தாத்தாவையும் போல அல்லாமல், 1979ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், பெரு நிறுவனங்களுக்கான கட்டமைப்புத் தேவைகளைச் செய்வது முதலான பணிகளில் ஈடுபடத் தொடங்கினார் அசிம் பிரேம்ஜி.
2000ஆம் ஆண்டு, சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய விப்ரோ நிறுவனம், நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. 2021ஆம் ஆண்டு, இந்த நிறுவனத்தின் வருவாய் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு, விப்ரோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய அசிம் பிரேம்ஜி தற்போது முழுமையாக தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது மூத்த மகன் ரிஷாத் பிரேம்ஜி, அவரது பதவியை ஏற்று, விப்ரோ நிறுவனத்தைக் கவனித்து வருகிறார்.