Tata Neu: ஏப்ரல் 7ல் ரிலீஸாகிறது டாடாவின் சூப்பர் செயலி!
டாடா குழுமம் Tata Neu என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.
டாடா குழுமம் Tata Neu என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. இது அக்குழுமத்தின் சூப்பர் செயலி என்று அழைக்கப்படுகிறது. இந்த Tata Neu செயலியை ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கூகுள் பிளே ஸ்டோரில் டீசர் இமேஜ் மூலம் டாடா குழுமம் வெளியிட்டுள்ளது.
அதிரடி என்ட்ரி!
இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் இந்தியாவின் ஃபிளிப்கார்ட் நிறுவனமும் தான் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அமேசானுடன் போட்டிபோட ஃபிளிப்கார்ட் கொஞ்சம் திணறிய வேளையில் தான் அந்நிறுவனத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. அதன்பின்னர் வால்மார்ட் ஃபிளிப்கார்ட் மீது முதலீடுகளைக் கொட்டிக் குவித்தது. இதனால் ஃபிளிப்கார்ட் இன்னும் அதிகமாகப் பிக்கப் ஆகி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக இ காமர்ஸ் என்றால் அமேசான், ஃபிளிப்கார்ட் என்றே மக்கள் மனங்களில் பதிருந்த வேளையில், இவ்விரு நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ஜியோ மார்ட் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தகத்திலும் தடம் பதிதார். ஜியோ மார்ட் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கடும் பிரயத்தனங்களை செய்யும் வேளையில் தான் சத்தமில்லாமல் என்ட்ரி கொடுத்துள்ளது டாடா.
ரிவார்ட்ஸுக்குப் பஞ்சமில்லையாம்..
ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே ரிவார்ட்ஸ் தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயமாக உள்ளது. அந்த வகையில் Neu செயலியில் ஷாப்பிங் செய்யும் போது அதிரடி ஆஃபர்கள், சலுகைகள் உத்தரவாதம் எனக் கூறுகிறது டாடா நிறுவனம். அப்புறம் பேமென்ட் அனுபவமும் சிறந்ததாக இருக்கும் என வாக்குறுதி அளிகிறது. NeuCoins, cards, UPI, EMI என பேமென்ட்டுக்கு பல வழிகள் இருக்கிறதாம். மளிகை சாமான் தொடங்கி காஸ்ட்லியான, லேட்டஸ்ட்டான மின்னணு சாதனம் வரை அனைத்துமே ஆன்லைனிலேயே வாங்கலாம். டாடா பே ஆப்ஷன் மூலம் சேவைக் கட்டணங்களையும் செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை Neu செயலி வாயிலாக விமான டிக்கெட், ஹோட்டல் அறை புக் செய்யும் போது ரிவார்ட்ஸ் கேரன்டி என்கிறது டாடா குழுமம். பேமென்ட், மேனேஜ் யுவர் ஃபினான்ஸ், ப்ளான் யுவர் ஹாலிடே, யுவர் நெக்ஸ்ட் மீல் என நிறைய ஆப்ஷன்கள் கொட்டிக் கிடக்கின்றன எனக் கூறுகிறது டாடா குழுமம்.
Neu செயலி மூலம் ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா ஆகியவற்றில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், தாஜ் குழுமத்தில் ஹோட்டல்களை முன்பதிவு செய்தல், பிக்பாஸ்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தல், 1mg இலிருந்து மருந்துகளை ஆர்டர் செய்தல், குரோமாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வெஸ்ட்சைடில் இருந்து ஆடைகள் வாங்குதல் போன்ற பல்வேறு Tata Group டிஜிட்டல் சேவைகளை இந்த சூப்பர் செயலியில் அணுக முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பாக உள்ளது.
“ஒரே செயலிக்குள் பல்வேறு சேவைகளை அளிக்கும் செயலிகளை இணைத்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதே இந்த சூப்பர் செயலி. இந்தியாவில் தற்போது டாடா குழுமத்துக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருக்கும் நிலையில் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சூப்பர் செயலியை உருவாக்கி உள்ளோம்” என்று தங்களின் புதிய செயலி குறித்து அந்நிறுவனத்தின் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.