100% FDI in BPCL: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 100% தனியார்மயம் - மத்திய அமைச்சரவை முடிவு
தற்போதைய, நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையின்படி பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்களில் 49% அளவு ஆட்டோமேடிக் முறையில் மட்டுமே FDI அனுமதிக்கப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்திட, பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(பிபிசிஎல்) நிறுவனத்தில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழிவகுக்க, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
நேரடி அந்நிய முதலீடு (FDI), பொருளாதார வளர்ச்சியில் முக்கிய காரணியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கடன் அல்லாத நிதி ஆதாரமாக இது இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு உகந்த நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை அரசு உருவாக்கியுள்ளது. இதன்கீழ் பெரும்பாலான துறைகள் / செயல்பாடுகளில் ஆட்டோமேடிக் முறையின் கீழ் 100% வரையில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப் படுகிறது.
தற்போதைய, நேரடி அந்நிய முதலீட்டுகொள்கையின்படி பெட்ரோலிய பொதுத்துறை நிறுவனங்களில் 49% அளவு ஆட்டோமேடிக் முறையில் மட்டுமே FDI அனுமதிக்கப்படுகிறது. அரசின் பங்கு 51 %- க்கும் குறைவாக சென்றுவிடாத வகையில், பங்குகளை விற்கும் கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. இதன் காரணமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியார்மயமாக்க முடியாது. எனவே, 49% ல் இருந்து 100% வரையிலான FDI-க்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
2020-21 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை பங்குகள் மூலம் ரூ.1,75,000 கோடி திரட்டுவது என்று உயர்த்தப்பட்ட இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது இந்தத் தகவலை வெளியிட்டார். மேலும், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது, காப்பீடு துறையில் 74 சதவீதம் வரை நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிப்பது, எல்ஐசியின் பங்குகளை விற்பது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, நாட்டுக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2014-15 ஆம் ஆண்டில் வந்த மொத்த நேரடி அந்நிய முதலீடு 45.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது, 2016-17 நிதி ஆண்டில் இது 60.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2020-21-ம் நிதியாண்டில் $ 81.72 பில்லியன் அமெரிக்கா டாலர்களை அரசு ஈட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தனியார்மய கொள்கை:
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மய கொள்கைக்கு மத்திய அரசு முன்னதாக ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் வரவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், 2 வகை துறைகள் தனியார்மயமாக்கப்படவுள்ளன.
1. முக்கிய துறை: அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் வரும் துறைகளில் குறைந்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும் மற்றவை தனியார்மயமாக்கப்படும் அல்லது மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படும் அல்லது மூடப்படும்.
2. முக்கியமற்ற பிரிவு: இந்தப் பிரிவில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும், அல்லது மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

