TATA - Haldiram: ஹல்திராம் குழுமத்தை வாங்கப்போகும் டாடா..? சில்லறை வர்த்தகத்திலும் கோலோச்ச முடிவு..!
பிரபல சிற்றுண்டி நிறுவனமான ஹல்திராம் சிற்றுண்டி குழுமத்தை டாடா குழுமம் வாங்க உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் ஆகும். ஆட்டோமொபைல், இரும்பு, அத்தியாவசிய பொருட்கள் என பல துறைகள் கோலோச்சி வரும் டாடா நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் பல ஆயிரக்கணக்கான கோடி ஆகும்.
டாடா - ஹல்திராம்:
இந்த நிலையில், டாடா நிறுவனம் இந்தியாவில் சிற்றுண்டி தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹல்திராம் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1937ம் ஆண்டு மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஹல்திராம் சிற்றுண்டி அவர்களது பிரசித்தி பெற்ற சிற்றுண்டிகளால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்கள். தற்போதைய சூழலில், ஹல்திராம் குழும சொத்து மதிப்பும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி நிற்கும்.
ஹல்திராம் குழுமத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்காக டாடா குழுமம் முயற்சிப்பதாகவும், இதற்காக டாடா குழுமம் 10 பில்லியனை செலவிட தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், ஹல்திராம் குழுமம் 10 பில்லியனுக்கு 51 சதவீத பங்குகளை விற்பனை செய்ய தயக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை
டாடா நிறுவனம் பிஸ்லேரி நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பிருந்தே ஹல்திராம் குழுமத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், அப்போது அந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாத நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிற்றுண்டிகளுக்கான 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தையில் சுமார் 13 சதவீத பங்கை ஹல்திராம் கொண்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி ஹல்திராம் குழுமத்தின் சிற்றுண்டிகள் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உயர்தர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரிலையன்சுக்கு போட்டியா?
ஹல்திராம் குழுமத் தலைவர் மனோகர் லால் அகர்வால் கடந்தாண்டு, தங்களது குழுமம் தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்க விரும்புவதாகவும், இரண்டு அல்லது 3 ஆண்டுகளில் பங்குச்சந்தையில் இறங்க விரும்புவதாகவும் கூறியிருந்தார். அப்போது முதல் டாடா குழுமம் ஹல்திராம் குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
கடந்த நிதியாண்டில் மார்ச் 981 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஹல்திராம் பெற்றிருந்தது. அவர்களது வருவாய் தற்போது 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் கோலோச்சி வரும் சூழலில் ஹல்திராம் குழுமத்தை வாங்கினால் டாடா குழுமம் ரிலையன்ஸ் குழுமத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழுமம் ஏற்கனவே உப்பு, குடிநீர் விநியோகத்திலும் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Post Office Savings Schemes: போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு தொடங்க போறீங்களா? அப்ப இதை நோட் பண்ணிக்கோங்க...முக்கியம் இதுதான்!
மேலும் படிக்க: Bharat Row: மீண்டும் பணமதிப்பிழப்பு? பறிபோகும் அடையாளம்? இந்தியா பெயரை மாற்றினால் என்னவெல்லாம் நடக்கும்?