Petrol Diesel Price | சென்னையில் சதத்தை நெருங்கிய பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்!
இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.49க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.46க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.99.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.93.72க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும்.
தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோலின் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை ஆகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார்.
ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கு உத்தரவாதம் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு