(Source: ECI/ABP News/ABP Majha)
எல்லாமே பக்கா பிளான்.. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த தொழிற் குழுமங்கள்!
ஒருவேளை பிரிவினை நடந்தால் அனைத்து உறுப்பினர்களும் இங்கு வரலாம். பிரிவினை வராவிட்டால் இரு இடங்களிலும் தொழில் நடக்கும் என்பதுதான் திட்டம்.
இன்று 75-வது சுதந்திர தினம். கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் எவ்வளவோ மாறியிருக்கிறது. போக்குவரத்து, நகரங்கள் உருவாக்கம், மருத்துவம், தொலைத்தொடர்பு ஆகியவை பெரிய அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வறுமை காரணமாக இன்றும் பலர் இறந்தாலும் மொத்தமாக வறட்சி என்றால் என்பதை நாம் பார்த்திருக்க மாட்டோம். தற்போது கொரானா வைரஸ் இருந்தாலும் சுகாதார கேடுகளால் ஏற்படும் மரணங்கள் பெருமளவுக்கு தடுக்கப்பட்டது என்பதே உண்மை.
இந்த முன் கதை எதற்கு என்றால் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்த போது என்ன வசதி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளதான். அதிகபட்சம் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்க கூடும் என பல குறிப்புகள் இருக்கிறது. எல்.கே. அத்வானி முதல் திலிப் குமார் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்களின் பூர்விகம் பாகிஸ்தான்தான்.
இதேபோல சில தொழில் குழுமங்களும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளன.
1940களில் இந்தியா, பாகிஸ்தான் பிரியும் என்பதை யாரும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்திய-பாகிஸ்தான் பிரிவினை என்பது தவிர்க்க முடியவில்லை. முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினையில் உறுதியாக இருந்தார்.
1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடக்கிறது. காலரா உள்ளிட்ட நோய்கள் கிழக்கு இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. தவிர அப்போதைய அரசு இந்தியாவில் உணவு பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை என்பதால் வறட்சியும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் (1943) தற்போது பாகிஸ்தான் பகுதியில் கமாலியா நகரத்தில் இருக்கும் ஒரு இந்து குடும்பம் கவலையில் மூழ்குகிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை என்பது எப்படியும் நடந்துவிடும். கிழக்குப் பகுதியில் இருக்கும் பஞ்சம் மற்றும் நோய்கள் இங்கேயும் வரும். நாம் வசிக்கும் பகுதி பாகிஸ்தான் வசம் சென்றுவிடும் பட்சத்தில், இங்கு நாம் எப்படி வாழ்வது என யோசிக்க தொடங்குகிறது.
அந்த குடும்பத்தை மறுசீரமைக்க முடிவு செய்கிறார் குடும்பத்தலைவர். அதனால் அங்கிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமிர்தசரஸ் பகுதிக்கு செல்ல திட்டமிடப்படுகிறது. இது சீக்கியர்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் இந்த பகுதி பாகிஸ்தான் வசம் செல்லாது என்பதுதான் நம்பிக்கை.
குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்த இடத்தில் இருந்து வெளியேற விரும்பம் இல்லை. பிரிவினை நடக்காது என நினைக்கிறார்கள். ஆனால் பிரிவினைக்கான வாய்ப்பு அதிகம் என்பது புரியவைக்கப்படுகிறது. அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் வராமல் சில உறுப்பினர்கள் மட்டுமே அமிர்தசரஸில் தொழில் தொடங்குகின்றனர்.
ஒருவேளை பிரிவினை நடந்தால் அனைத்து உறுப்பினர்களும் இங்கு வரலாம். பிரிவினை வராவிட்டால் இரு இடங்களிலும் தொழில் நடக்கும் என்பதுதான் திட்டம்.
அதனால் குடும்பத்தில் உள்ள சிலர் மட்டுமே வந்து அமிர்தசரஸில் 1944-ம் ஆண்டு தொழில் தொடங்குகின்றனர். அப்போதைக்கு சாலைகளில் சைக்கிள் மட்டுமே இருக்கும் என்பதால் சைக்கிள் உதிரி பாகங்கள் தொழிலில் ஈடுபட்டனர்.
நாட்கள் சென்றது இந்திய பிரிவினை நடந்தது. அங்கு கமாலியாவில் இருந்து கிடைத்ததை எடுத்துக்கொண்டு குடும்பம் அமிர்தரசரஸ் வந்தது. அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தான் சென்ற ஒரு முஸ்லீம் குடும்பம் தங்கி இருந்த வீட்டுக்கு அந்த குடும்பம் சென்றது.
நாளடைவில் பிஸினஸ் வளர்ந்து. சைக்கிள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை தொடங்கலாம் என திட்டமிடப்படுகிறது. இவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததுபோல லூதியானாவில் கரீம் தீன் என்பவர் பாகிஸ்தான் செல்ல தயாராகி வந்தார். அவர் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நபர் பயன்படுத்தி வந்த பிராண்ட்தான் ஹீரோ. அந்த பிராண்டைதான் பாகிஸ்தானில் இருந்து வந்த முஞ்சால் குடும்பம் வாங்குகிறது. இந்த நிறுவனம்தான் பின்னாட்களில் ஹீரோ சைக்கிள், ஹீரோமோட்டோ கார்ப் என்னும் பெரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
2000 ஆண்டுகளின் மத்தியில் நாமக்கலில் இருந்து சென்னை வருவதே பெரிய இமாலய சாதனையாக நினைத்த எனக்கு, சுதந்திரத்துக்கு முன்பு, அப்போது கிடைத்த தகவல்களை வைத்து, ஆராய்ந்து நாட்டை மாற்றி, தொழில் தொடங்கி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. Anticipate என்னும் வார்த்தைக்கு இதைவிட வேறு உதாரணத்தை சொல்ல முடியாது.
எஸ்கார்ட்ஸ்
இதேபோல 1944-ம் ஆண்டு நந்தா சகோதரர்கள் லாகூரில் இருந்து டெல்லிக்கு வந்தார்கள். பாகிஸ்தானில் பஸ் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். 5,000 ரூபாய் மற்றும் இரு கார்களுடன் வந்த நந்தா டெல்லி இன்பீரியல் ஓட்டலில் ( அந்த காலத்தில் உயர் சொகுசு ஓட்டல்) அறை எடுத்து தங்கி இருந்ததார்கள்.
சொகுசு ஓட்டலில் தங்குவதற்கு காரணம், என்னிடம் இருப்பதை தக்கவைப்பதற்காக குறைவாக செலவு செய்தால் குறைவான வருமானமே கிடைக்கும். தவிர பிஸினஸ் தொடர்புகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இதுபோன்ற ஓட்டலில் தங்குவது அவசியம் என கூறினார். இவர் உருவாக்கிய குழுமம்தான் எஸ்கார்ட்ஸ் தற்போது எஸ்கார்ட் குழுமம் டிராக்டர் உள்ளிட்ட விவசாய துறை சாதனங்கள், கட்டுமானத்துக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சியில் இவர்களை போன்றவர்களுக்கும் சிறு பங்கு இருக்கிறது.