RBI Credit Card: கிரெடிட் கார்ட்களுக்கு புதிய வழிமுறைகள் - ஆர்பிஐ அதிரடி - யாருக்கு சிக்கல்?
RBI Credit Card: கிரெடிட் கார்ட் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
RBI Credit Card: கிரெடிட் கார்ட் விநியோகஸ்தர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளால், நிகழ உள்ள மாற்றங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
கிரெடிட் கார்ட் - ஆர்பிஐ:
இந்தியாவில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக் பி.டி.இ. லிமிடெட், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா–ரூபே மற்றும் விசா ஆகியவை ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் கார்ட் நெட்வர்க்குகளாக உள்ளன. இவற்றின் செயல்பாடு தொடர்பான ஆய்வில், கார்ட் நெட்வொர்க்குகள் மற்றும் கார்ரட் வழங்குபவர்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்தேர்வு கிடைப்பதற்கு உகந்ததாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, தங்களுக்கான சேவையை வழங்கும் நெட்வர்க்குகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் அம்சம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதை மாற்றும் வகையில் தான், கிரெடிட் கார்ட்களை வழங்குவதற்காக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாதவற்றுடன் அங்கீகரிக்கப்பட்ட அட்டை நெட்வொர்க்குகளை இணைப்பது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள் விவரங்கள்:
இதுதொடர்பான சுற்றறிக்கையின்படி,
- இதர கார்ட் நெட்வொர்க்குகளின் சேவையை பெறுவதற்கு வாடிக்கையாளர்களை தடுக்கும் வகையில், எந்த கார்ட் நெட்வொர்க்குடனும் கிரெடிட் கார்ட் வழங்கும் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது.
- புதியதாக கிரெடிட் கார்ட் வழங்கும்போது, கார்ட் நெட்வொர்க்கை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
- ஏற்கனவே உள்ள வாடிக்கையாளராக இருந்தால், அவர்கள் கிரெடிட் கார்டை புதுப்பிக்கும்போது கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும்.
- சுற்றறிக்கை வெளியானதில் இருந்து 6 மாதங்களில் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
- 10 லட்சம் அல்லது அதற்கு குறைவான கிரெடிட் கார்ட்களை மட்டுமே வழங்கி உள்ள நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
- தங்களது சொந்த கார்ட் நெட்வொர்க் மூலம் கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது.
புதிய நடைமுறையின் நோக்கம் என்ன?
புதிய வழிகாட்டுதல்கள் மூலம், ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டைகளை வழங்குதல் மற்றும் பயன்படுத்துவதில் அதிக விருப்பத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிரெடிட் கார்ட் என்றால் என்ன?
கிரெடிட் கார்ட் என்பது ஒரு வங்கி அல்லது கடன் வழங்குபவர் வழங்கும் அட்டையாகும். இது ஒரு பயனர், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஒரு வரம்புக்குள் கடன் பெற அனுமதிக்கிறது. கடன் வரம்பு என்பது ஒரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவழிக்க அல்லது கடன் வாங்கக்கூடிய அதிகபட்ச தொகையாகும். கடன் வரம்பு என்பது, கடன் வாங்குபவரின் வருமானம், வருமான ஆதாரம், கடன் மதிப்பெண், திருப்பிச் செலுத்தும் வரலாறு மற்றும் மற்ற தனிப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.