Income Tax Return: உங்க வருமானத்துக்கான வரியை தவிர்க்கணுமா? அப்ப இந்த 5 ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க..!
Income Tax Return: உங்களது வருவாய்க்கான வரியை மிச்சப்படுத்துவது எப்படி என்பதற்கான ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Income Tax Return: உங்களது வருவாய்க்கான வரியை மிச்சப்படுத்துவதற்கான, 5 முக்கிய வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வரி சேமிப்பு ஆலோசனைகள்:
ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற, 80C படிவம் உதவுகிறது. இந்த விலக்குகளை தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) அணுகலாம். அண்டின் மொத்த வருமானத்தில் இருந்து ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெற முடியும். இது பழைய வரி விதிப்பு முறைக்கு மட்டுமே பொருந்தும், புதிய வரி விதிப்பு முறைக்கு பொருந்தாது. இதனை கருத்தில் கொண்டு 80C பிரிவின்படி, உங்களுக்கான வரி சேமிப்பு பலன்களை வழங்கக் கூடிய முதலீட்டு திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது வரி சேமிப்பை வழங்குவதோடு, எதிர்காலத்திற்கான நிதி இலக்குகளை அடையவும் உதவுகிறது.
1. EPF பங்களிப்பு அதிகரிப்பு:
சம்பளம் பெறும் தனிநபர்களின் EPF முதலீட்டு வரம்பு, ரூ.1.5 லட்சத்தை எட்டவில்லை என்றால், தன்னார்வ வருங்கால வைப்பு நிதிக்கு (VPF) கூடுதல் பங்களிப்புகளைச் செய்யலாம். இந்த கூடுதல் பங்களிப்புகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து கழிக்கப்படும். மேலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) நீங்கள் தனியாக ஆண்டுதோறும் ரூ. 50,000 வரை முதலீடு செய்தால், பிரிவு 80CCD (1B) இன் கீழ் கூடுதலாக ரூ. 50 ஆயிரம் வருமான வரியைச் சேமிக்கலாம்
2. வீட்டுக் கடன்:
ஒரு வங்கி, NBFC அல்லது வீட்டுக் கடன் நிறுவனம் போன்ற நிதி நிறுவனத்திடமிருந்து, வீட்டுச் சொத்தை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு வீட்டுக் கடன் பெறப்பட்டால், அந்தக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையினை குறிப்பிட்டு, குறிப்பிட்ட வரம்புகளுக்குள் வரி விலக்கு கோரலாம். பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே இந்த வரிச் சேமிப்புகள் பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களும் அதற்கான ஆவணங்களை சமர்பித்து, வரிச் சலுகைகளை அனுபவிக்கலாம்.
3. மருத்துவ காப்பீடு திட்டத்தின் சலுகைகள்:
வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் மருத்துவ பாலிசி எடுப்பதன் மூலம் ரூ.25 ஆயிரம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த உடல்நலக் காப்பீட்டில் உங்கள் பெயர், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்கள் இருக்கலாம். மருத்துவ காப்பீடு திட்டங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், மூத்த குடிமக்கள் மருத்துவ செலவுகளை குறிப்பிட்டு ரூ.50 ஆயிரம் வரை சலுகை பெற முடியும்.
4. நன்கொடை:
ஏதேனும் நிறுவனத்திற்கும் நன்கொடை அளித்தால், ரூ.25,000 வரை வரிச் சலுகையைப் பெறலாம். வருமான வரியின் 80ஜி பிரிவின் கீழ், நன்கொடையாக வழங்கப்படும் தொகைக்கு ரூ.25,000 வரை வரி விலக்கு கோரலாம்.
5. சரியான வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுங்கள்:
2020-21 நிதியாண்டிலிருந்து புதிய எளிமைப்படுத்தப்பட்ட விருப்ப தனிநபர் வருமான வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தனிநபர்கள் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், சில வரிவிலக்குகள் மற்றும் சலுகைகள் இல்லாமல் பொருந்தும், குறைக்கப்பட்ட ஸ்லாப் விகிதங்களில் வரி செலுத்தலாம். இதன் விளைவாக, தனிநபர்கள் தற்போதுள்ள மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் செலுத்த வேண்டிய வரியை ஒப்பிட்டு, வரிக் கண்ணோட்டத்தில் தங்களுக்கு அதிக நன்மை பயக்கும் முறையை தேர்ந்தெடுக்கலாம்.