EPS Rules Changed: இனி 6 மாதங்களே போதும்..! பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!
EPS Rules Changed: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில், மத்திய அரசு புதிய திருத்தம் ஒன்றை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
EPS Rules Changed: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் இனி 6 மாதங்களுக்கு முதலீடு செய்தாலே, பணத்தை திரும்பப் பெற மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்:
மத்திய அரசு அண்மையில் பணியாளர் ஓய்வூதியத் திட்டம், 1995 இல் திருத்தம் செய்துள்ளது. புதிய விதிகளின்படி, 6 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு ஓய்வூதிய திட்டத்திற்கான பங்களிப்பை வழங்கி இருந்தாலும், பயனாளர் அந்த பணத்தை திரும்பப் பெற முடியும். இந்தத் திருத்தம், 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பை மேற்கொண்ட பிறகு, திட்டத்தை விட்டு வெளியேறும் பணியாளர்களுக்கு பெரும் பலனளிக்கும். காரணம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள், இந்த வகையில் வெளியேறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
முந்தைய விதி என்ன?
பணிக்கால வருடங்களில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் இபிஎஸ் பங்களிப்பு செலுத்தப்பட்ட சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் இதுவரை திரும்பப் பெறும் பலன் கணக்கிடப்படுகிறது. எனவே, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கான பங்களிப்புச் சேவையை முடித்த பின்னரே, பணத்தை உறுப்பினர்கள் திரும்பப் பெற தகுதி அடைவார்கள். இதன் விளைவாக, 6 மாத காலத்திற்கும் குறைவாக பங்களிப்பு வழங்கிய ஏராளமான உறுப்பினர்கள், ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தனது பணத்தை திரும்பப் பெறமுடியாமல் தவித்தனர். அந்த இன்னல் இனி இல்லாத வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில், 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்புச் சேவையின் காரணமாக, பணத்தை திரும்பப் பெறும் பலனின் சுமார் 7 லட்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. திருத்தத்திற்குப் பிறகு, ஜூன் 14, 2024க்குள் 58 வயதை எட்டாத அனைத்து EPS உறுப்பினர்களும் திரும்பப் பெறுவதற்கான பலனைப் பெறத் தகுதி பெறுவார்கள்.
ஓய்வூதியம் கிடைப்பது எப்படி?
ஊழியர் ஓய்வூதியத் திட்டம், 1995 (இபிஎஸ்) தொடங்கப்பட்டது. இதனால் தனியார் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களும் ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். EPF திட்டம், 1952-ன் கீழ், ஊழியரின் EPF இல் பணியாளரின் பங்களிப்பு, அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் 12 சதவிகிதம், முதலாளியின் 12 சதவிகிதக பங்களிப்பில் 8.33 சதவிகிதம் ஓய்வூதிய திட்டத்திற்குச் செல்கிறது. மீதமுள்ள பகுதியில், 3.67 சதவிகிதம் EPF க்கும், 0.50 சதவிகிதம் EDLI க்கும் செல்கிறது. ஊழியர் 58 வயதை எட்டியதும் இபிஎஸ் பணத்தில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் பெறலாம். ஊழியரின் ஓய்வூதியக் கணக்கில் அரசாங்கத்தின் பங்களிப்பும் உள்ளது.
EPS இல் ஒரு ஊழியரின் அதிகபட்ச மாதாந்திர பங்களிப்பு 1250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. EPS இன் சிறப்பு அம்சம் என்னவென்றால், அதன் பலன் பணியாளருக்கு மட்டுமின்றி, பயனாளர் ஏதேனும் காரணத்தால் இறந்தால், அவருடைய குடும்பம் அதாவது மனைவி மற்றும் குழந்தைகள் ஓய்வூதியத்தின் பலனை 'குடும்ப ஓய்வூதியம்' வடிவில் பெற முடியும்.