NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?
NPS Vatsalya Scheme Details: என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் ஏற்கெனவே இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சி ஆகும். இது குழந்தைகளுக்கான முதலீட்டை முதன்மையாக வைத்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தைத் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு PRAN எனப்படும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணையும் அளிக்கிறார். இதுதொடர்பாக நாடு முழுவதும் 75 இடங்களில் NPS Vatsalya நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், NPS Vatsalya திட்டம் என்றால் என்ன? யாரெல்லாம் இதில் சேர முடியும்? திட்டத்தின் பயன் குறித்துக் காணலாம்.
வாத்சல்யா திட்டம் என்றால் என்ன? (What is NPS Vatsalya scheme?)
என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் ஏற்கெனவே இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சி ஆகும். இது குழந்தைகளுக்கான முதலீட்டை முதன்மையாக வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மேலாண்மை செய்கிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து பெற்றோர் முதலீடு செய்யலாம். இதன்மூலம் எல்லா வகையான பொருளாதார நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் வாத்சல்யா திட்டத்தில் சேர முடியும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் சிறு வயதில் இருந்தே இந்தத் திட்டத்தில் சேரலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, முதலீட்டுக்குக் கூட்டு வட்டி வழங்கப்படும்.
என்ன தகுதி?
* இந்தியக் குடிமகனாக இருக்கும் பெற்றோரே இந்தத் திட்டத்தில் சேர முடியும்.
* குழந்தைக்கு 18 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.
* கேஒய்சி (KYC - Know Your Customer) செய்திருக்க வேண்டும்.
பணத்தைப் பெறுவது எப்படி?
என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறந்தபிறகு 3 ஆண்டுகள் கழித்தே, பணத்தை எடுக்க முடியும். எனினும் பகுதி அளவு மட்டுமே எடுக்க முடியும்.
குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை, படிப்பு, குறிப்பிட்ட உடல் நலக்குறைவு, 75 சதவீத உடல் ஊனம் ஆகிய காரணங்களுக்காக 3 முறை வரை பணத்தை எடுக்கலாம்.
18 வயது நிரம்பியதும் என்ன செய்யலாம்?
18 வயது ஆனதுடன் இந்தத் திட்டத்தில் உள்ள மொத்தப் பணத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் எடுக்க முடியும். அதற்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில், இருக்கும் பணத்தில் 20 சதவீதத் தொகையை ஒரே கட்டமாக எடுக்க முடியும்.
அதேபோல என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் கணக்கை, குழந்தைகள் தேவையான வயதை (18) அடைந்தவுடன், வழக்கமான என்பிஎஸ் கணக்காக (NPS Account) எளிதாக மாற்றலாம்.