LIC IPO Announcement: எல்.ஐ.சியின் பங்குகள் விற்பனை நாள் எது? பங்குகளின் விற்பனை மதிப்பு என்ன? வெளியான தகவல்..
எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை வர உள்ள தேதி மற்றும் அந்த பங்குகளின் விலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு எல்.ஐ.சியின் சில பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது. அதன்படி விரைவில் எல்.ஐ.சியின் ஐபிஓ வெளியாகும் என்ற தகவல் பரவி வந்தது. இந்நிலையில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனை வரும் மே 4 முதல் 9 வரை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தப் பங்குகளின் தொடக்க விலை 902 முதல் 949 ரூபாயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையமான (செபி) ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட 5 சதவிகித எல்.ஐ.சி பங்குகள் விற்பனைக்கு பதிலாக 3.5% பங்குகள் விற்பனைக்கு செபி ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 21 ஆயிரம் கோடி மதிப்பிலான 22 கோடி பங்குகளை விற்பனை செய்ய செபி ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது.
எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை சற்று தள்ளி வைக்கப்பட்டது. மேலும் அப்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் 31.6 ஆயிரம் கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்து. அது தற்போது 22 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு தனியார் மயமாக்கம் மூலம் நடப்பு நிதியாண்டில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை ஒரு முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்