Japan Recession: மீண்டும் வந்த பொருளாதார மந்தநிலை! இரையான ஜப்பான் - இந்தியாவுக்கு ஆபத்தா?
உலக நாடுகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், ஜப்பான் பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
உலக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்லும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்கள் தங்களின் செலவுகளை குறைக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மந்தநிலையின் விளைவாக, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
ஜப்பானை பின்னுக்கு தள்ளிய ஜெர்மனி:
இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக மூன்றாவது இடத்தை ஜப்பான் இழந்துள்ளது. அதாவது, உலகின் முதல் மிகப் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்காவும், இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனாவும் உள்ளது.
இதனை அடுத்து, மூன்றாம் இடத்தில் ஜப்பானும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் இருந்தது. இந்த நிலையில் தான், ஜெர்மணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் எதிர்பார்த்ததை விட ஜிடிபி மோசமாக சரிந்துள்ளது.
என்ன காரணம்?
ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் 3.3 சதவீதமாக குறைந்த நிலையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 0.4 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த இரண்டு காலாண்டிலும் ஜப்பானின் ஜிடிபி வளர்ச்சியில் சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில், தற்போது பொருளாதார மந்த நிலைக்கு சென்றிருக்கிறது.
2023 ஆம் ஆண்டில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 டிரில்லியன் டாலராக உள்ளது. சராசரி வளர்ச்சி 5.7 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 4.46 டிரில்லியன் டாலராக ஆக உள்ளது.
இந்த மோசமான நிலைக்கு, ஜப்பானில் உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்ட பெரிய அளவிலான சரிவு தான் என்று கூறப்படுகிறது. ஜப்பான் சரிவை தொடர்ந்து, இங்கிலாந்து பொருளாதாரம் மந்த நிலைக்கு எண்டரி கொடுத்துள்ளது. இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்காவது காலாண்டில் 0.3 சதவீதமாக சரிந்துள்ளது. எனவே, ஜப்பான் பொருளாதார மந்த நிலைக்கு சரிந்த அடுத்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தின் ஜிடிபி சரிவை கண்டது.
இந்தியாவின் நிலை?
முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையின் அடிப்படையில் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கூறுகின்றனர். வல்லரசு நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 3 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Gold Bond : தொடங்கியது தங்க பத்திரம் விற்பனை; விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? -விவரம்!