Gold Tariff: காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
Gold Silver Tariff: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவிகிதம் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Gold Silver Tariff: தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்கம், வெள்ளி மீதான வரியை உயர்த்திய மத்திய அரசு:
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி உயர்வு நடவடிக்கையானது உலகில் தங்கத்தை அதிகம் நுகர்வு செய்யும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் அதன் தேவையைக் குறைக்கக்கூடும். இருப்பினும், அவை உள்நாட்டு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் உதவக்கூடும். அதேநேரம், 2024-ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா தங்கத்தின் மீதான வரிகளைக் குறைத்த பிறகு தணிந்திருந்த கடத்தலை, இந்த அதிக இறக்குமதி வரிகள் மீண்டும் தூண்டிவிடக்கூடும் என்று தொழில்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
10 சதவிகிதம் சுங்க வரி:
தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி உயர்வு நடவடிக்கையில், 10 சதவிகிதம் அடிப்படை சுங்க வரியும், 5 சதவிகிதம் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் (AIDC) அடங்கும். அதன்படி, தங்கம் மீதான வரியானது ஆறிலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நகைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கொக்கிகள், பிணைப்புகள், பிடிப்பான்கள், ஊசிகள் மற்றும் திருகாணி போன்ற சிறிய நகையின் பாகங்கள் மீதான வரி விகிதங்களையும் அரசு உயர்த்தியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளிப் பொருத்தும் பாகங்களுக்கு இனி 5% சுங்க வரியும், பிளாட்டினம் பொருத்தும் பாகங்களுக்கு 5.4% வரியும் விதிக்கப்படும்.
இந்தியா தனது தங்கத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. சமீபத்திய விலை ஏற்றம் மற்றும் கடந்த ஆண்டில் பங்குகளில் இருந்து கிடைத்த எதிர்மறை வருமானம் ஆகியவற்றின் மத்தியில், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை, குறிப்பாக முதலீட்டு நோக்கங்களுக்காக அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மக்களை வலியுறுத்தியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது வரியையும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
தங்கம் விலை எகிறுமா?
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி உயர்வு நடவடிக்கை காரணமாக, தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய அளவில் ஏற்றம் காண வாய்ப்புள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















