Income Tax Portal : வருமான வரி போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதா? வருமான வரித்துறை பகீர் விளக்கம்..
வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் மக்கள் தவித்துவருவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், வருமான வரி போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
வருமான வரி தாக்கல் செய்தவற்கான போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து விசாரிக்குமாறு போர்ட்டலை பராமரித்துவரும் இன்போசிஸ் நிறுவனத்தை வருமான வரித்துறை கேட்டு கொண்டுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்ட்டலில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம். இதனால், வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் மக்கள் தவித்துவருவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், வருமான வரி போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. போர்ட்டலில் தேடல் பக்கம் முடக்கப்பட்டது குறித்து விசாரிக்குமாறு மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸை கேட்டு கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஐடி போர்ட்டலை பயன்படுத்துகையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பின்னர், ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் பல பயனாளர்கள் புகார் தெரிவித்தனர். போர்ட்டல் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவான அதே நாளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இப்பிரச்னையை தீர்க்க இன்போசிஸ் முயற்சி மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை அளித்த விளக்கத்தில், "வருமான வரித்துறை தாக்கல் செய்வதற்கான போர்ட்டலின் தேடுதல் பக்கத்தில் பிரச்னை ஏற்பட்டிருப்பது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்வது குறித்து வருமானவரித்துறை ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. இதுகுறித்து விசாரிக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த விதமான தகவலகளும் கசியவில்லை என மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். கடந்தாண்டு, போர்ட்டலில் பல முறை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது.
கடந்தாண்டு ஜூன் 7-ஆம் தேதி, www.incometax.gov.in என்ற வருமானவரித்துறையின் புதிய போர்ட்டல் தொடங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்து, போர்ட்டலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் மற்றும் பயனாளர்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். பின்னர், போர்ட்டலை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்