Gold Rate 16th April: அட போங்கப்பா.. குறைவது போல் குறைந்து மீண்டும் ரூ.70,000-த்தை கடந்து புதிய உச்சத்தில் தங்கம்...
திடீரென தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை, 2 நாட்கள் குறைவது போல் குறைந்து, தற்போது மீண்டும் 70 ஆயிரம் ரூபாயை கடந்து, புதிய வரலாற்று உச்சத்தை அடைந்து அதிர்ச்சியளித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து மீண்டும் 70,000 ரூபாயை கடந்து, புதிய உச்ச விலையை தொட்டிருப்பதால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் புதிய வரலாற்று உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 2 நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதிலும், ஒரே நாளில் 760 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 10-ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 68,480 ரூபாயை எட்டியது. ஒரு கிராம் தங்கம் 8,560 ருபாயை எட்டியது. இதைத் தொடர்ந்து, 11-ம் தேதி, ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து பெரும் அதிர்ச்சியளித்து, சவரன் 69,960 ரூபாயாக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,745 என்ற புதிய உச்ச விலையை அடைந்தது.
இந்நிலையில், 12-ம் தேதி பேரதிர்ச்சியாக, 70,000 ரூபாயை கடந்தது தங்கம் விலை. அன்றைய தினம் சவரனுக்கு 200 ரூபாய்தான் உயர்தது என்றாலும், ஒரு சவரன் 70,160 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது. ஒரு கிராம் 8,770 ரூபாயை எட்டியது. இதைத் தொடர்ந்து, 13-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான 14-ம் தேதி, சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 70,040 ரூபாயாகவும், ஒரு கிராம் விலை 8,755 ரூபாயாகவும் விற்பனையானது. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினமும், அதாவது 15-ம் தேதியும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 69,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
மீண்டும் 70,000 ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சம்
இப்படி, 2 நாட்களாக சிறிதளவாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று(16.04.25) ஒரே நாளில் 760 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 70 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, இன்று கிராமிற்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,815 ரூபாயாகவும், சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 70,520 ரூபாய் என்ற புதிய வரலாற்று உச்ச விலையில் விற்பனையாகிறது.
2 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி
கடந்த 12-ம் தேதி கிராம் 110 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்த வெள்ளி, 13-ம் தேதி அதே விலையில், பின்னர் வார தொடக்க நாளான 14-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து 108 ரூபாயாக விற்பனையானது. அதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் 2 ரூபாய் உயர்ந்து 110 ரூபாயை மீண்டும் எட்டியது வெள்ளி.
இந்நிலையில், இன்றும் ஒரு கிராம் 110 ரூபாய் என்ற அளவில் நீடிக்கிறது வெள்ளி விலை. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து புதிய வரலாற்று உச்சங்களை தொட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் தங்கம் என்னென்ன சம்பவங்களை செய்ய காத்திருக்கிறது என தெரியவில்லை.

