Garuda Aerospace: ட்ரோன் பயிற்சி திட்டம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு.. பாராட்டு மழையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்..!
இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பாளரான கருடா ஏரோஸ்பேஸ், சமத்துவ ட்ரோன் பயிற்சி திட்டத்தின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் தயாரிப்பாளரான கருடா ஏரோஸ்பேஸ், சமத்துவ ட்ரோன் பயிற்சி திட்டத்தின் மூலம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் ட்ரோன் துறையில் 10,000 நபர்களை திறன்படுத்த நாடுமுழுவதும் இத்திட்டத்தை விரிவு படுத்துவோம் என கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன செயல் இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு பயிற்சி தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பணி வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 10 நாட்கள் இலவச பயிற்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றைவற்றை உணவு மற்றும் தங்குமிடம் உடப்ட கட்டணமின்றி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் வழங்கியது.
இன்று நடைபெற்ற விழாவில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன செயல் இயக்குனர் விஜயகுமார், தலைமை செயல் அதிகாரி ஷ்யாம், மாற்றுத்திறனாளி இளைஞர்களை தேர்வு செய்த ஆட்டோ மைக்ரோ யு.ஏ.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் வர்ஷா குக்ரெட்டி அகஸ்டின், மற்றும் ஓய்வு பெற்ற குரூப் கேப்டன் எம்.ஜே.அகஸ்டின் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ட்ரோன்களின் பாராமரிப்பு மற்றும் செயல்பாடு தொடர்பாகவும், விவசாயம், இ-காமர்ஸ், டெலிவரி, கண்காணிப்பு மற்றும் மேப்பிங் உள்ளிட்ட பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன செயல் இயக்குனர் விஜயகுமார், கருடா ஏரோஸ்போஸ் எப்போதும் புதிய திறமைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதில் முன்னணியில் உள்ளது என்றும், 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10,000 நபர்களை திறன்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை விரைவில் இந்தியா முழுவதும் வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
ஆட்டோ மைக்ரோ யுஏஎஸ் இன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வர்ஷா குக்ரெட்டி அகஸ்டின், ஒவ்வொருவரும் தங்கள் திறனைக் கற்றுக் கொள்வதற்கும் ஆராய்வதற்கும் சம வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்வதற்கு உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டதோடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சியை வழங்குவதன் மூலம், ஒருங்கிணைந்த ட்ரோன் பயிற்சி அகாடமி (IDTA) அவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் அற்புதமான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது என்றார்.