Diwali Muhurat Trading: தீபாவளியொட்டிய முகூர்த்த வர்த்தகம்: ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச் சந்தை..லாபத்தில் டாட்டா நிறுவனம்
தீபாவளியொட்டி, ஒரு மணிநேரம் மட்டும் இயங்கிய பங்குச் சந்தையானது ஏற்றத்துடன் தொடங்கியது
திங்கள் கிழமை, வழக்கமான வார நாட்களில் நடைபெறும் இந்திய பங்குச் சந்தைகள், தீபாவளி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று மாலை ஒரு மணி நேரம் முகூர்த்த வர்த்தகம் நடைபெற்றது. அதாவது மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
பங்குச் சந்தைகள் நிலவரம்:
இந்நிலையில், இன்று தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 663 .73புள்ளிகள் அதிகரித்து 59,970.88 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 192.50 புள்ளிகள் அதிகரித்து 17, 768.80 ஆக புள்ளிகளாக உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முடிவில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 59,307.15 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 17,576 புள்ளிகளாக இருந்தது.
லாபமடைந்த நிறுவனங்கள்:
ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, டாடா மோடார்ஸ், பஜாஜ் ஆட்டோ, அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டார், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.
சரிவை கண்ட நிறுவனங்கள்:
அதே நேரத்தில் ஹெச்யுஎல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை நஷ்டத்தை சந்தித்துள்ளன.
முகூர்த்த பங்குச் சந்தை:
இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை வழக்கமாக திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்படும். மேலும் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய விடுமுறை நாட்களிலும் பங்குச் சந்தைகள் செயல்படாது.
ஆனால், தீபாவளி நன்னாளை முன்னிட்டு, இன்று ஒரு மணி நேரம் மட்டுமே இயங்குகிறது. இந்நாளில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆகையால், இன்று முகூர்த்த தினத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பெரும் வீழ்ச்சியில் பங்குச் சந்தை சென்று கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.83 ஐ கடந்து சென்றது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பங்கு சந்தை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு 83 என்ற அளவில் நிலையாக உள்ளது.
உயர்ந்த டாலர் மதிப்பு:
அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதர நாடுகளின் கரன்சிகள் சரியத் தொடங்கியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அந்நிய முதலீட்டாளர்கள், வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது.
இதனால, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை டாலர்களில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.