Aviation | விமான கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு : அமைச்சகம் எதிர்பார்ப்பது என்ன?
இதன் மூலம் சிரமத்தில் இருக்கும் துறைக்கு அரசாங்கம் உதவுவது போல தோற்றம் அளித்தாலும், நீண்ட நாளைக்கு அரசாங்கத்தால் கஷ்டப்படும் நிறுவனங்களை காப்பாற்ற முடியாது.
இந்தியாவில் ரயில் கட்டணம் முதல் பஸ் கட்டணம் வரை நிலையான அளவிலே இருக்கும். ஆனால் விமான டிக்கெட் கட்டணம் மட்டும் தேவை மற்றும் இருப்புக்கு ஏற்ப ஏற்ற, இறக்கமாக இருக்கும். சில சமயங்களில் ரயிலின் முதல் வகுப்பு கட்டணம் அளவில் இருக்கும். ஆனால் தேவை அதிகமாக இருக்கும்போது பல மடங்கு கட்டணத்தில் இருக்கும்.
இவையெல்லாம் கொரோனாவுக்கு முன்பு. கொரோனா காலத்தில், (கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து) மொத்தமாக விமானத்துறைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில வாரங்களுக்கு செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து விலை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல ஒரு விமானத்தில் கொரோனாவுக்கு முன்பாக செயல்படும் விமானத்தில் இவ்வளவு சதவீதம்தான் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதேபோல சர்வதேச செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
கடந்த ஆண்டு நிறுவனத்தின் மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் 33 சதவீதம் மட்டுமே செயல்படவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த அளவு உயர்த்தப்பட்டு கடந்த டிசம்பரில் 80 சதவீதம் அளவுக்கு செயல்பட அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் அலை தொடங்கியவுடன் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மீண்டும் 50 சதவீத விமானங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 65 சதவீதம் விமானங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கேட்டிருந்தது. விலை கட்டுப்பாடுகள் மற்றும் விமான இயக்குவதற்கான விதிமுறைகள் தளர்த்த வேண்டும் என இரு வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில் விமான போக்குவரத்து துறையில் சில மாற்றங்களை செய்திருக்கிறது மத்திய அரசு.
1. குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
2. மொத்த விமானங்களில் 72.5 சதவீத விமானங்களை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பயண நேரத்தை கணக்கிட்டு ஏ முதல் ஜி வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 9.8 சதவீதம் முதல் 12.8 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்தப்பட்டிருக்கிறது. 40 நிமிட பயண நேரத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 2600 ரூபாயில் இருந்து 2900 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல அதிகபட்ச கட்டணம் 7800 ரூபாயில் இருந்து 8800 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 180 முதல் 210 நிமிட பயண நேரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக 8700 ரூபாயில் இருந்து 9800 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல உச்சபட்ச கட்டணம் 24200 ரூபாயில் இருந்து 27200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண கட்டுப்பாடு 30 நாட்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை மட்டுமே கட்டண கட்டுப்பாடு இருக்கும் அதற்கு பிறகு கட்டண கட்டுப்பாடு இல்லை. அதிக கட்டணம் என்று இல்லை. நிர்ணயம் செய்ததை விட குறைந்த விலையில் கூட கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியாது.
விமான துறை எதிர்பார்ப்பது?
விமானத்துறையில் முன்கூட்டியே முன்பதிவு செய்தால் சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கும். ஆனால் தற்போதைய டிக்கெட் கட்டுப்பாடுகளால் அந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில்லை. சமயங்களில் விமானத்தில் குறைவான முன்பதிவு இருக்கும்போது, டிக்கெட் விலையை நிறுவனங்கள் குறைத்து வாடிக்கையாளர்களை வர வைப்பார்கள். தற்போது அந்த வேலையும் நிறுவனங்களால் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட உச்சபட்ச விலைக்கே விற்பதால் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் உருவாகிறது.
இதன் மூலம் சிரமத்தில் இருக்கும் துறைக்கு அரசாங்கம் உதவுவது போல தோற்றம் அளித்தாலும், நீண்ட நாளைக்கு அரசாங்கத்தால் கஷ்டப்படும் நிறுவனங்களை காப்பாற்ற முடியாது.
தவிர இதுபோன்ற கட்டுப்பாடுகள் விமான நிலையத்துக்குள் வருபவர்களின் எண்ணிக்கையை பெருமளவுக்கு குறைத்துவிடும். கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட, மிக குறைந்த அளவு மக்களை விமான நிலையத்துக்கு வருகிறார்கள். இதனால் இந்த துறை மற்றும் விமானத்தை சார்ந்து இருக்கும் பல தொழில்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றன.
வழக்கமாக மற்ற துறைகளை போலவே தடுப்பூசி போடும் வேகத்தை உயர்த்தினால் விமான நிலையத்துக்குள் பாதுகாப்பாக நுழையலாம். மேலும் தடுப்பூசி சான்றிதழை கொண்டுவருவது அல்லது அவர்களுக்கு சலுகைகள் வழக்கும்பட்சத்தில் அதிக மக்களை விமான நிலையத்துக்கு வர வைக்கலாம் என கருதுகின்றனர்.
கட்டுப்பாடுகளால் இந்த துறையை வளர்ச்சிபாதைக்கு கொண்டுசெல்ல முடியாது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதே விமானப் போக்குவரத்து துறையினர் விரும்புகின்றனர்.