TN Agri Budget: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்.. விவசாயிகள் எதிர்பார்ப்பு என்னென்ன?
TN Agriculture Budget 2023: கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் தான் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மகளிருக்கான உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துறை ரீதியாக அறிவித்தார். மேலும் அரசால் தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ள திட்டம், எதிர்காலத்தில் செயல்படுத்தப்போகும் திட்டம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட்
இதனிடையே சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தாக்கல் செய்யப்படும் 2வது முழுமையான வேளாண் பட்ஜெட் இதுவாகும். இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் தான் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும் tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம், 9363440360 என்ற வாட்ஸ்அப் மூலமும் கருத்துகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சட்டப்பேரவை இனி மார்ச் 23 ஆம் தேதி வழக்கம்போல செயல்படும். அன்றையதினம் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.