TN Budget 2024: மூன்றாம் பாலினத்தவரின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும்; 3 புது தோழி விடுதிகள்- வெளியான அறிவிப்பு
Tamil Nadu Budget 2024: மூன்றாம் பாலினத்தவரின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் எனவும் தமிழ்நாட்டில் உழைக்கும் மகளிருக்காக மேலும் 3 தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவரின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் எனவும் தமிழ்நாட்டில் உழைக்கும் மகளிருக்காக மேலும் 3 தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
''தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள் தாம்பரம், திருச்சிராப்பள்ளி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 10 இடங்களில்1145 மகளிர் பயன் பெறும் வகையில் 35 கோடி ரூபாயில் அனைத்து நவீன வசதிகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.
3 புதிய 'தோழி' விடுதிகள்
சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் ஆகிய நகரங்களில், 432 பெண்கள் பயன்பெறும் வகையில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய 'தோழி' விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, வரும் நிதியாண்டில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய 'தோழி' விடுதிகள் கட்டப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்வுக்கென பல்வேறு புதுமையான திட்டங்களை நாட்டிலேயே முன்னோடியாக தமிழ்நாடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டினை உறுதிசெய்து, வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது மிகவும் இன்றியமையாததாகும்.
அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும்
எனினும், தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மூன்றாம் பாலினத்தவர் மட்டுமே தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். எனவே, உயர்கல்வியைத் தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். திருநங்கைகள் நல வாரியம் மூலம் நடைமுறைப்படுத்தவிருக்கும்இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் கூடுதலாக அரசால் வழங்கப்படும்.
அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை திறம்படச் செயல்படுத்தவும் அதன் நிர்வாகத்தை மேம்படுத்தவும் உரிய ஆலோசனைகள் வழங்கிட அமைக்கப்பட்ட மேனாள்நீதிபதி கே. சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்துறையில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது என இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை சமூகப் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் இயங்கி வந்த இந்தத் துறை, இனி “குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்யப்படும்''.
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.