(Source: ECI/ABP News/ABP Majha)
Apple India Revenue: இந்தியாவில் மட்டும் ரூ.50,000 கோடி கல்லா கட்டிய Apple நிறுவனம் - அப்படி என்னதான் நடந்துச்சு?
Apple India Revenue: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 2022-23 நிதியாண்டில் ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apple India Revenue: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விற்பனை, 48 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் வருவாயில் புதிய மைல்கல்:
registrar of companies (RoC) எனப்படும் நிறுவனங்களை பதிவு செய்யும் மத்திய அரசின் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகமானது ஏறக்குறைய 50 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அந்த நிறுவன சாதனங்களின் விற்பனை 48 சதவிகிதம் அதிகரித்து 49 ஆயிரத்து 321 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்துள்ளது. நிகர லாபம் கடந்த ஆண்டை விட 2 ஆயிரத்து 229 கோடி அதாவது 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எகானமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆப்பிளின் நிகர லாபத்தில் இது வேகமான வளர்ச்சியாக உள்ளது.
வருவாய் விவரங்கள்:
RoC வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 94.6 சதவிகித வருவாயானது அந்நிறுவன சாதனங்களின் விற்பனை மூலம் தான் கிடைத்துள்ளது. மீதமுள்ள 5.4 சதவிகித வருவாய் மட்டுமே பராமரிப்பு மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. உலகளாவிய ஆப்பிள் சாதன விற்பனையில் 30 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில், தனது சேவை வணிகத்தை அந்நிறுவனம் இன்னும் முழுமையாக விரிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம்:
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் ஐபோன் விற்பனை மூலம் கிடைக்கபெறுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தியாவில் இருந்து ஐபோன்களின் ஏற்றுமதி என்பது 56 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதோடு அல்ட்ரா பிரீமியம் ஹெட்செட்களுக்கான பிரிவு, அதாவது 45 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட ஹெட்செட்களுக்கான சந்தையில் 59 சதவிகித பங்கை ஆப்பிள் நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது இந்தியாவை ஒரு முக்கியமான எதிர்கால சந்தையாக ஆப்பிள் நிறுவனம் கருதி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 100%-க்கும் அதிகமான வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயெ முதன்முறையாக அண்மையில் தான் டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதும் நினைவு கூறத்தக்கது.
வருவாய் அதிகரிக்க காரணம் என்ன?
ஆப்பிள் அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை சாதனங்களின் விற்பனை தான், அதன் விற்பனை மற்றும் வருவாய் அதிகரிக்க காரணம் என துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உதிரி பாகங்களுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டது, வருவாய் அதிகர்ப்பிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விற்பனை மற்றும் லாபம் அத்கரித்ததற்கான காரணங்கள் எதையும், ஆப்பிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.