India's Top 10 Banks: லோன் வாங்க போறீங்களா? இந்தியாவின் மிகப்பெரிய 10 வங்கிகளின் விவரம் இதோ..!
எச்.டி.எஃப்.சி வங்கியின் இணைப்பை தொடர்ந்து நாட்டில் தற்போதுள்ள பெரிய 10 வங்கிகள் எவை என்பதை இங்கு அறியலாம்.
எச்.டி.எஃப்.சி வங்கியின் இணைப்பை தொடர்ந்து நாட்டில் தற்போதுள்ள பெரிய 10 வங்கிகள் எவை என்பதை இங்கு அறியலாம்.
இணைந்த எச்.டி.எஃப்.சி நிறுவனங்கள்:
இந்திய வரலாற்றில் இரு நிறுவனங்களின் இணைப்பால் நடைபெற்ற மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை எனும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது எச்.டி.எஃப்.சி வங்கி. எச்.டி.எஃப்.சி குழுமம் தனது தாய் நிறுவனமான நிதி நிறுவனத்தை, தனது வங்கியுடன் இணைக்கும் பணிகளை நேற்று பூர்த்தி செய்துள்ளது. புதிய HDFC வங்கி நிறுவனம் சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும்.
இது ஜெர்மனியின் மக்கள்தொகையை விட அதிகம் ஆகும். இந்த இணைப்பின் மூலம், உலகின் மதிப்புமிக்க வங்கிகளின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. உலகின் அதிக மதிப்புமிக்க வங்கிகளில் முதல்முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பிடித்துள்ளது. அதோடு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளை பின்னுக்குத் தள்ளி, நாட்டிலேயே முதன்மையான வங்கி எனும் பெருமையையும் எச்.டி.எஃப்.சி. வங்கி பெற்றுள்ளது.
எச்.டி.எஃப்.சி வங்கி - ரூ.14 லட்சம் கோடி:
கடந்த மார்ச் மாத இறுதி வரையில் தற்போது இணைக்கப்பட்ட இரு நிறுவனங்களின் வர்த்தகம் ரூ.41 லட்சம் கோடி ஆகும். இணைப்பின் மூலம், நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ. 4.14 லட்சம் கோடியாக இருக்கும். மார்ச் 2023 இன் இறுதியில் இரு நிறுவனங்களின் கூட்டு லாபம் சுமார் ரூ. 60,000 கோடி ஆகும். அதோடு, எச்.டி.எஃப்.சி வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.14 லட்சம் கோடியை கடந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய வங்கி எனும் பெருமையை எச்.டி.எஃப்.சி வங்கி தனதாக்கியுள்ளது.
இந்தியாவின் பெரிய வங்கிகள்:
1. HDFC வங்கி (இணைப்புக்குப் பின்) - ரூ.14,12,055.5 கோடி
2. ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் - ரூ. 6,53,704.04 கோடி
3. பாரத ஸ்டேட் வங்கி - ரூ.5,11,201.77 கோடி
4. கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் - ரூ. 3,66,967.55 கோடி
5. ஆக்சிஸ் வங்கி லிமிடெட் - ரூ.3,04,211.88 கோடி
6. இண்டூசிண்ட் வங்கி லிமிடெட் - ரூ.1,06,707.03 கோடி
7. பேங்க் ஆஃப் பரோடா - ரூ.98,436.88 கோடி
8. ஐடிபிஐ வங்கி லிமிடெட் - ரூ.59,482.29 கோடி
9. பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ. 56,882.91 கோடி
10. கனரா வங்கி - ரூ.54,750.45 கோடி
மேற்குறிப்பிட்ட தொகைகள் அனைத்தும் சந்தை மதிப்பில் வங்கிகளின் மொத்த மதிப்பாகும். முன்னதாக, ஐசிஐசிசி வங்கி தான் நாட்டிலேயே சந்தை மதிப்பின் அடிப்படையில் மிகப்பெரிய வங்கியாக இருந்தது. அந்த இடத்தை எச்.டி.எஃப்.சி வங்கி இப்போது தனதாக்கியுள்ளது.
எச்.டி.எஃப்.சி நிறுவனங்களின் இணைப்பின் மூலம் அந்த வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை தற்போது 8,300க்கும் மேல் அதிகரிக்கும். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தை கடக்கும். அதோடு, எச்.டி.எஃப்.சி வங்கியிலிருந்து காப்பீடு தொடங்கி பரஸ்பர நிதிகள் வரை முழுமையான நிதிச் சேவைகளை வழங்கப்பட உள்ளது.