2 யூனிட் சார்ஜ் செய்தால் 40 கி.மீ ஓடும் பைக் கண்டுபிடித்த காய்கறி வியாபாரி
’’12 நாட்களில் மின்சாரம் பேட்டரி மூலம் இயங்கும் பைக்கை தயாரித்து கொடுத்து விடுவேன். அடுத்த கட்டமாக பயணிகளின் ஆட்டோவை, மின்சார பேட்டரி மூலம் இயக்குவதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன்’’
கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் குடியரசு (44). எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்து, வருமானம் இல்லாததால், குடியரசு குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். தெரிந்த தொழில் கைகொடுக்காததால், வேறு வழியில்லாமல், கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் மோட்டார் சைக்கிளில் காய்கறிகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து கிடைத்த லாபத்தில், பெரும் பகுதி வருமானம், மோட்டார் சைக்கிளுக்கு தேவையான பெட்ரோலுக்கே காலியானது. இதனால் அதிகாலை எழுந்து மார்க்கெட்டிற்கு சென்று காய்களை வாங்கி வந்து, மாலை வரை வியாபாரம் செய்து, அதில் வரும் வருமானத்தில், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றி விட்டு, கணக்கு பார்த்த போது, லாபம் இல்லாமல், முதலீடு செய்த தொகையாவது கிடைக்குமா என்ற நிலை உருவானது. இதனையடுத்து, தான் படித்த படிப்பை வைத்து, தன்னுடைய வருமானத்திற்கு ஏற்றவாறு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என குடியரசு முடிவு செய்தார். இதனால் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள குடியரசு, பெட்ரோல் செலவை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தான் வைத்திருந்த பழைய மோட்டார் சைக்கிள் ஒன்றில் மின் மோட்டாரை இணைத்து அதற்கு மின் இணைப்பு வழங்க வெளிமாநிலத்தில் இருந்து 48 வாட் மின்திறன் கொண்டபேட்டரி ஒன்றை வாங்கி மோட்டார் சைக்கிளுடன் இணைத்து புதிய மின் மோட்டார் சைக்கிளை உருவாக்கினார்.
மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மின் மோட்டார் சைக்கிளை ஒரு முறை 2 யூனிட் சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைத்தார். இந்த மின் மோட்டார் சைக்கிள் மூலம் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்ததின் மூலம், பெட்ரோல் செலவை முற்றிலுமாக நிறுத்தியதுடன், கண்டுபிடித்த மோட்டார் சைக்கிள் உற்பத்தி வாங்குவதற்கான செலவையும் காய்கறி வியாபாரத்தின் மூலம் சம்பாதித்து விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு அரசு உரிய அங்கீகாரம் அளித்தால் தொடர்ந்து நாட்டுக்கும் ஏழை மக்களுக்கும் பயனுள்ள பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என தன்னம்பிக்கையுடன் குடியரசு தெரிவித்துள்ளார். இது குறித்து குடியரசு கூறுகையில், பெட்ரோல் விலை உயர்வால், குடும்பத்தை நடத்துவதற்கே கஷ்டம் ஏற்பட்டதால், படித்த படிப்பு எனக்கு கைகொடுத்தது. பெட்ரோல் இல்லாமல், மின்சாரம் மூலம் இயங்கும் வாகனத்தை கண்டு பிடிக்க வேண்டும் என முடிவு செய்து, தேவைப்படாது என ஒதுக்குபுறத்தில் கிடந்த, பழைய டிவிஎஸ் 50 பைக்கில், வெளிமாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு மின்சாதனங்களை கொண்டு, 12 நாட்களில் மின்சார பைக்கினை தயாரித்தேன்.
2 யூனிட் சார்ஜ் செய்தால், சுமார் 40 கிலோ மீட்டர் துாரம், 400 கிலோ எடையுடன் பயணம் செய்யலாம். ஆனால் தற்போது வரும் மின்சார பைக்குகள், கிலோ மீட்டர் குறைவாகவும், சுமார் 250 கிலோ எடை வரை தான் பொருட்களை எடுத்து செல்ல முடியும். நான் வியாபாரத்திற்கு செல்லும் ஏரளாமான வாடிக்கையாளர்கள், எனது பைக்கை பார்த்து விட்ட, தங்களுக்கும் தயாரித்து தர வேண்டும் என கேட்டுள்ளனர். 60 ஆயிரம் செலவு செய்தால், 12 நாட்களில் மின்சாரம் பேட்டரி மூலம் இயங்கும் பைக்கை தயாரித்து கொடுத்து விடுவேன். அடுத்த கட்டமாக பயணிகளின் ஆட்டோவை, மின்சார பேட்டரி மூலம் இயக்குவதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன். இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கவுள்ளேன். தமிழக அரசு எனக்கு அனுமதியளித்தால், ஆட்டோவிற்கும் குறைந்த செலவில் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் வகையில், தயாரித்து கொடுப்பேன் என்றார்.