Tesla’s India Launch: அப்படி போடு! ஒருவழியாக இந்தியா வரும் டெஸ்லா கார்! உற்பத்தி ஆலை எங்கு அமைகிறது தெரியுமா?
Tesla’s India Launch: பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா 2024ம் ஆண்டு இந்திய சந்தையில், தனது கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tesla’s India Launch: பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் உற்பத்தி ஆலை, இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் டெஸ்லா கார்:
இன்ஜின்களுக்கு பதிலாக பேட்டரிகளை கொண்டும் காரை இயக்கலாம் என கூறி, டெஸ்லா நிறுவனத்தை எலான் மஸ்க் தொடங்கியபோது அதனை யாரும் அன்று பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால், இன்று ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையே, மின்சார வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அதில் டெஸ்லா நிறுவனம் முக்கிய பங்கு வகித்தாலும், தற்போது வரை அந்நிறுவனத்தின் நேரடி விற்பனை இந்தியாவில் தொடங்கவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பல்வேறு முறை அரங்கேறியுள்ளன. சலுகைகள் மற்றும் ஒழுங்குமுறை பரிசீலனைகள் குறித்து நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே விவாதங்கள் நடந்து வருகின்றன. அண்மையில் கூட இந்தியாவிஸ் டெஸ்லா உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை தொடங்குவது தொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
குஜராத்தில் டெஸ்லா தொழிற்சாலை?
இந்நிலையில், 2024ம் ஆண்டில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள குஜராத் உச்சி மாநாட்டில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லா ஆலைக்கான சாத்தியமான தளங்களாக சனந்த், தோலேரா மற்றும் பெச்சராஜி உள்ளிட்ட பல இடங்களை மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை டெஸ்லாவின் இந்திய உற்பத்தித் தளத்தில் இருந்து ஏற்றுமதி உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் இலக்குடன் ஒத்துப்போகிறது. மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி போன்ற பெரிய வாகன உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி வசதிகளை ஏற்கனவே பெற்றுள்ள குஜராத்தில், டெஸ்லா ஆலையும் அமைந்தால் வாகனத் துறையின் முக்கிய மையமாக அம்மாநிலம் மேலும் வலுவடையும்.
டெஸ்லாவிற்கு சிறப்பு சலுகைகள்?
மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு மானியம் வழங்கப்படாது என்பது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக உள்ளது. ஆனால், முழுமையாகக் கட்டமக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்யும்போது டெஸ்லா நிறுவனம் 15-20 சதவிகிதம் இறக்குமதி வரியில் சலுகையை அனுபவிக்கலாம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசால் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரிய சலுகையாக இருக்கலாம். இருப்பினும், இந்தச் சலுகையானது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி நிறுவனத்தை நிறுவுவதைச் சார்ந்துள்ளது. அதேநேரம், வெளிநாட்டு நிறுவனத்திற்கு மட்டும் குறிப்பிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய உள்நாட்டு நிறுவனங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.