Tata Sumo 2025: டான்களின் அடையாளம் - மாஸ் கம்பேக் கொடுக்கும் டாடா சுமோ, லிட்டருக்கு 28 கி.மீ.? விலை விவரம்
Tata Sumo: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லெஜண்டரி மாடலான டாடா சுமோ, புதிய வடிவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Tata Sumo: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் லெஜண்டரி மாடலான டாடா சுமோ, புதிய வடிவில் எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மாஸ் கம்பேக்கிற்கு தயாரான டாடா சுமோ:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அறிமுகம் ஆகியிருந்தாலும், ஒரு சில மாடல்கள் தான் அடையாளமாக காலம் கடந்து நிலைத்து நிற்கும். அதில் தவிர்க்க முடியாத ஒரு கார் தான், டாடா சுமோ. கட்டுமஸ்தான வடிவமைப்புடன் பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கான சிறந்த தேர்வாக இந்த வாகனம் விளங்கியது. குடும்பமாக வெளியே செல்வதற்கான நல்ல ஆப்ஷனாகவும், சினிமாக்களில் டான் என்றாலே சுமோ இருக்கும் என்ற ஒரு அடையாளமும் தவிர்க்க முடியாததாய் மாறியது. 10 பேர் அமரும் வகையிலான இருக்கை வசதிகளுடன் 1994ம் ஆண்டு அறிமுகமான டாடா சுமோ, கடந்த 2019ம் ஆண்டு சந்தையில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் தான், புதிய வடிவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் அப்டேடட் டாடா சுமோ விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டாடா சுமோவின் மறுபிறவி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சுமந்த் மூல்கௌகரின் பெயரின் சுருக்கமாகவே சுமோ என்ற பெயர் இந்த கார் மாடலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் மாடல் எந்தவொரு பயணத்திற்கும் ஏற்றதாகவும், பரந்த விசாலமான இடவசதி, வலுவான திறன் ஆகியவற்றால், நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ள சுமோ மாடலானது புதிய வெளியீடாக மட்டுமின்றி, இந்திய ஆட்டோமொபைலின் சின்னங்களில் ஒன்றான சுமோவின் மறுபிறவியாக கருதப்படுகிறது.
டாடா சுமோ - வெளிப்புற வடிவமைப்பு
டாடா சுமோ தனது பாரம்பரிய பாக்ஸி வடிவமைப்பை தக்கவைத்துக் கொண்டாலும், நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும் நவீன வடிவமைப்பு கூறுகளையும் கொண்டுள்ளது. சுமோவின் தலைமைப்பண்பிற்கு தன்மையை தக்கவைத்துக்கொண்டு, கிரில்லில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கூர்மையான எல்இடி முகப்பு விளக்குகள் பிரீமியம் டச்சை பெற்றுள்ளன. பக்கவாட்டு வடிவமைப்பில் கட்டுமஸ்தான கட்டமைப்பை கொண்டுள்ளது. வழக்கமான அனைத்து தோற்ற விவரங்களையும் அப்படியே கொண்டுள்ளது. பின்புற எல்இடி விளக்குகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில் கேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை கார்கோ பகுதியை அணுகுவதை எளிதாக்கியுள்ளது. டாப் வேரியண்ட்களுக்கான புதிய அலாய் வீல்கள், வித்தியாசமான சாலைகளிலும் நல்ல பயண அனுபவத்தை வழங்க உதவுகிறது. புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், பார்த்தவுடன் டாடா சுமோ என அடையாளம் காண்பதற்கான அம்சங்கள் வெளிப்புறத்தில் அப்படியே தொடர்கிறது.
டாடா சுமோ: உட்புற வசதிகள்
புதிய டாடா சுமோவின் உட்புற பகுதியானது முற்றிலும் அப்டேட்டை பெற்றுள்ளது. அதன்படி, டாப் வேரியண்ட்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
| வசதிகள் | ஸ்டேண்டர்ட் வேரியண்ட் | மிட் வேரியண்ட் | ப்ரீமியம் வேரியண்ட் |
| இருக்கை வசதி | 7 இருக்கைகள் | 7 இருக்கைகள் | பிரீமியல் அப்ஹோல்ஸ்ட்ரி உடன் 7 இருக்கைகள் |
| இன்ஃபோடெயின்மெண்ட் | 7 இன்ச் டச் ஸ்க்ரீன் | 9 இன்ச் டச் ஸ்க்ரீன் | 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் |
| கனெக்டிவிட்டி | ப்ளூடூத், யுஎஸ்பி | ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே | ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் டெக் |
| கிளைமேட் கண்ட்ரோல் | மேனுவல் ஏசி | ரியர் வெண்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி | ரியர் ஏசிகளுடன் கூடிய ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் |
| இன்ஸ்ட்ரூமெண்ட் | டிஜிட்டல் MID உடன் கூடிய அனலாக் | செமி டிஜிட்டல் கிளஸ்டர் | ஃபுல்லி டிஜிட்டல் 7 இன்ச் டிஸ்பிளே |
| சீட் மெட்டீரியல்ஸ் | ஃபேப்ரிக் | ப்ரீமியம் ஃபேப்ரிக் | லெதரேட் |
| ஸ்டியரிங் கண்ட்ரோல்ஸ் | பேசிக் ஆடியோ கண்ட்ரோல்ஸ் | மல்டி ஃபன்க்சன் கண்ட்ரோல்ஸ் | வாய்ஸ் கமேண்ட்ஸ் உடன் கூடிய மல்டி ஃபங்சன் |
நீண்ட தூர பயணங்களை சிரமமற்றதாக மாற்றும் அளவிற்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது வரிசை இருக்கைகள் அடல்ட் பயணிகளை கருத்தில் கொண்டு போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் வசதியை கொண்டுள்ளது. சுமோவின் மிக முக்கிய அடையாளமான போதுமான இடவசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் குடும்பமாக பயணிப்பதற்கு மட்டுமின்றி, வணிக பயன்பாட்டிற்கும் ஏற்ற தேர்வாக புதிய சுமோ திகழும் என நம்பப்படுகிறது.
பவர் ட்ரெயின் விவரங்கள்:
புதிய சுமோவில் மேம்படுத்தப்பட்ட இன்ஜின்களை வழங்கி, அதிகப்படியான செயல்திறனை டாடா சுமோ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| விவரங்கள் | டீசல் இன்ஜின் | பெட்ரோல் இன்ஜின் |
| இன்ஜின் | 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் | 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் |
| பவர் அவுட்புட் | 170 HP | 160 HP |
| டார்க் | 350 Nm | 250 Nm |
| டிரான்ஸ்மிஷன் | 6 ஸ்பீட் மேனுவல் / 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் | 5 ஸ்பீட் மேனுவல் / 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் |
| ட்ரைவ் சிஸ்டம் | RWD/4WD (குறிப்பிட்ட வேரியண்ட்கள்) | RWD |
| எரிபொருள் திறன் | லிட்டருக்கு 26-28 கிமீ | லிட்டருக்கு 18-20 கிமீ |
| உமிழ்வு தரம் | BS6 Phase II compliant | BS6 Phase II compliant |
பாதுகாப்பு அம்சங்கள்:
பழைய மாடலில் பாதுகாப்பு அம்சம் என்பது பெரும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், புதிய மாடாலில் அதற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக,
- இரட்டை முன்புற ஏர்பேக்குகள்
- EBD உடன் கூடிய ABS
- எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்
- ஹில் ஹோல்ட் அசிஸ்ட்
- ரிவெர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ்
- ISOFIX குழந்தைகளுக்கான சீட் ஆங்கர்ஸ்
- அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட்பெல்ட்ஸ்
டாப் வேரியண்ட்களில் பாதுகாப்பு அம்சங்கள்:
- சைட் அன்ட் கர்டெயின் ஏர்பேக்ஸ்
- 360 டிகிரி கேமரா சிஸ்டம்
- பிளைண்ட் ஸ்பாட் மானிடரிங்
- அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்
- லேன் கீப்பிங் அசிஸ்ட்
- ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங்
- டயர் பிரசெஸ் மானிட்டரிங் சிஸ்டம்
- ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
ஆகிய வசதிகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப் ரோட் அம்சங்கள்:
சுமோ கார் தனது ஆரம்பப் புள்ளியை மறக்காமல், ஆஃப்-ரோடிற்கான பல அம்சங்களை தக்கவைத்துள்ளது. நார்மல், எகோ, ஸ்போர்ட், மற்றும் ரஃப் ரோட் போன்ற ட்ரைவிங் மோட்களை கொண்டுள்ளது. 210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடன், 28 டிகிரி அப்ரோச் ஏங்கலையும், 25 டிகிரி டிபார்ட்சுர் ஏங்கலையும் கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
பயனர்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு வேரியண்ட்களில் புதிய சுமோ விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி,
| வேரியண்ட் | இன்ஜின் ஆப்ஷன் | எதிர்பார்க்கப்படும் விலை |
| தொடக்க மாடல் | 2.0 லிட்டர் டீசல்/ 1.5 லிட்டர் பெட்ரோல் | ரூ.8.99 -ரூ.9.50 லட்சம் |
| நடுத்தர மாடல் | 2.0 லிட்டர் டீசல்/ 1.5 லிட்டர் பெட்ரோல் | ரூ.10.50 - ரூ.11.49 லட்சம் |
| டாப் எண்ட் மாடல் | 2.0 லிட்டர் டீசல்/ 1.5 லிட்டர் பெட்ரோல் | ரூ.12.00 - ரூ.12.99 லட்சம் |
| ப்ரீமியம் | 2.0 லிட்டர் டீசல்/ 1.5 லிட்டர் பெட்ரோல் | ரூ.13.00 - ரூ.13.49 லட்சம் |
வெளியீடு எப்போது?
புதிய சுமோ கார் மாடலின் வெளியீடு தொடர்பான தகவல் எதையும் டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம், நடப்பாண்டு இறுதிக்குள் இந்த கார் மாடல் சந்தைக்கு கொண்டு வரப்படும் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.





















