Tata Sierra EV: புதுசுலாம் வேணாம் - விண்டேஜ் மாடலை EV/ICE ஃபார்மில் களமிறக்கும் டாடா - மைலேஜ், ரேஞ்ச் - விலை
Tata Sierra ICE EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது விண்டேஜ் கார் மாடலானா சியாராவை, அப்கிரேடுகளுடன் EV மற்றும் ICE எடிஷனில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Tata Sierra ICE EV: டாடாவின் விண்டேஜ் கார் மாடலானா சியாரா, EV எடிஷனில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது.
டாடா சியாரா கார் மாடல்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆழமாக கால்பதிக்கும் நோக்கில், கடந்த சில ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதுப்புது கார்களை தீவிரமாக அறிமுகம் செய்து வருகிறது. இதில் எதிர்கால வாகனமாக கருதப்படும் மின்சார கார்களும் அடங்கும். அந்த வகையில் தான் ஏற்கனவே சந்தையில் ICE எடிஷனில் உள்ள ஹாரியர் காரின் மின்சார எடிஷன் வரும் ஜுன் 3ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய காரின் அறிமுகத்திற்கு மத்தியில் தனது விண்டேஜ் கார் மாடலான சியாராவை அப்கிரேட் செய்து மீண்டும் சந்தைப்படுத்தும் பணியிலும் தீவிரமாக டாடா நிறுவனம் பணியாற்றி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இதுதொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், அண்மையில் நடந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் சியாரா எஸ்யுவின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள கார் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது.
EV/ICE எடிஷன்களில் சியாரா:
டாடா நிறுவனம் சமீப காலமாக பின்பற்றி வரும் வழிமுறையிலேயே, சியாரா கார் மாடலும் இன்ஜின் மற்றும் மின்சாரம் என இரண்டு எடிஷன்களிலும் சந்தைப்படுத்த உள்ளது. அதுவும் நடப்பு நிதியாண்டின் இறுதியிலேயே இந்த அறிமுகம் ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜுன் 3ம் தேதி ஹாரியர் மின்சார எடிஷன் அறிமுகமாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம்சியாரா கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அண்மைக்காலமாக கசிந்து வரும் இந்த காரின் சோதனை ஓட்ட புகைப்படங்களால், இதுதொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகி வருகிறது.
டாடாவின் புதிய சியாரா வடிவமைப்பு:
டாடா நிறுவனம் சியாரா கார் மாடலை நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி மறுவடிவமைப்பு செய்துள்ளது. பழைய கவனத்தை ஈர்கக் கூடிய அழகுடன் புதிய மாடர்ன் அம்சங்களை சேர்த்துள்ளது. பழைய சியாரா மாடலில் இருந்த பிரமாண்ட கண்ணாடிகள், பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக நீக்கப்பட்டுள்ளன. பானெட்டிற்கு கீழே எல்இடி டிஆர்எல்கள், கிளாஸி பிளாக் கிரில்செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், விண்டேஜ் பாக்ஸி வடிவமைப்பை அப்படி தக்கவைத்துள்ளது. அதற்கு அழகு சேர்க்கும் வகையில் டூயல் டோன் ப்ளோட்டிங் ரூஃப், அட்டகாசமான அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் கனெக்டட் எல்இடி விளக்குகள், டாடா பேட்ஜின் கீழே 'சியரா' பெயர்ப்பலகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
டாடாவின் சியாரா உட்புற வசதிகள்:
டாடாவின் அண்மைக்கால கார் மாடல்களில் இருப்பதை போன்ற டேஷ்போர்ட் சியாராவிலும் தொடர, செண்ட்ரல் கன்சோல் தற்போதுள்ள மற்ற மாடல்களில் இருந்து வேறுபட்டு உள்ளது. டேஷ்போர்டின் மையப்பகுதியில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோட்யின்மெண்ட் சிஸ்டம், முற்றிலும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் கிடைமட்ட ஏசி வெண்ட்கள் உள்ளன. 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆனது ஒளிரக்கூடிய பிராண்டின் லோகோவை கொண்டுள்ளது.
வசதிகளை பொருத்தவரையில் இன்ஜின் மற்றும் மின்சாரம் என இரண்டு எடிஷன்களிலும், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், குரல் கட்டளையில் இயங்கும் வசதிகள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா ஆகியவற்றுடன் லேன் கீப் அசிஸ்ட், லேன் சீஞ்ச் அசிஸ்டன்ஸ் மற்றும் ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்றவற்றை உள்ளடக்கிய லெவல் 2 ADAS ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
டாடா சியாராவின் பவர்ட்ரெயின் விவரங்கள்:
இன்ஜின் எடிஷன் சியாராவானது பெட்ரோல் மற்றும் டீசல் என ஆப்ஷன்களையும் பெற உள்ளது. அதன்படி, 168bhp மற்றும் 280 NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறலாம். அதோடு நன்கு அறியப்பட்ட தற்போது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் உள்ள, 168bhp மற்றும் 350 NM ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2 லிட்டர் கிரையோடிக் டீசல் இன்ஜின் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா பெட்ரோல் இன்ஜின் 17 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜும், 2 லிட்டர் கிரையோடிக் டீசல் இன்ஜின் சுமார் 17 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்குகிறது.
மின்சார எடிஷன் தொடர்பான தகவல் தற்போது வரை வெளியாகாவிட்டாலும், ஹாரியர் மின்சார எடிஷனில் இருக்கும் பேட்டரி பேக் சியாராவிலும் இடம்பெறலாம் என கருதப்படுகிறது. அதன்படி, டூயல் மோட்டார் ஆல்-வீல் ட்ரைவ் செட்டப்பில் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை பெறும் என தெரிகிறது.
விலை, போட்டியாளர் விவரங்கள்:
சியாரா கார் மாடலின் இரண்டு எடிஷன்களின் விலை ஏறக்குறைய சுமார் 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்போது, ஹுண்டாய் கிரேட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும். மின்சார எடிஷனை பொருத்தவரையில் ஹுண்டாய் கிரேட்டா எலெக்ட்ரிக், மஹிந்திரா BE 6, MG ZS EV ஆகியவற்றிடமிருந்து சியாரா போட்டியை எதிர்கொள்ளலாம்.
டாடா சியாரா விண்டேஜ்:
டாடா நிறுவனத்தின் விண்டேஜ் சியாரா கார் மாடல் முதல்முறையாக கடந்த 1991ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் எஸ்யுவி இதுவாகும். ஆனால் அதிகப்படியான விலை, நடைமுறைக்கு ஒத்துவராத 3 கதவுகளை கொண்ட வடிவமைப்பால் பொதுமக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக கடந்த 2003ம் ஆண்டு உற்பத்தியில் இருந்து கைவிடப்பட்ட சியாரா, தற்போது அப்கிரேட்களுடன் மீண்டும் சந்தைபப்டுத்தப்பட உள்ளது.





















