Tata Harrier Safari: பாதுகாப்பு அம்சங்களில் உச்சகட்டம் - 5 ஸ்டார்களுடன் அறிமுகமாகும் டாடா ஹேரியர், சஃபாரி மாடல் கார்கள்
Tata Harrier Safari: டாடா நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல் கார்கள், பாதுகாப்பு பரிசோதனைகளில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளன.
Tata Harrier Safari: பாதுகாப்பு பரிசோதனைகளில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ள, டாடா நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல் கார்களின் தொடக்க விலை, 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் அதிரடி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்து வரும் உற்பத்தி நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் விதமாக, , டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் மற்றும் சஃபாரியின் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஹேரியர் வேரியண்டின் தொடக்க விலை ரூ.15.50 ஆகவும், சஃபாரியின் தொடக்க விலை ரூ.16.2 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய தோற்றம்:
ஹேரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளில் தோற்றத்தில் மாற்றத்துடனும், ஸ்போர்ட்டினெஸ் உடனும் காட்சியளிக்கிறது. அதன்படி புதிய முகப்பு விளக்குகள், எல்.ஈ.டி டிஆர்எல்கள், லைட் பார், சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், கிரில் மற்றும் பம்பர் ஆகியவை புதிய ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டில் இடம்பெறுள்ளன. சில புதிய அற்புதமான வண்ண விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹாரியருக்கு சன்லைட் எல்லோ மற்றும் சஃபாரிக்கு காஸ்மிக் தங்கம் ஆகிய நிறங்களும் அடங்கும். ஸ்போர்ட்டியான லுக்கில் புதிய 19-இன்ச் அலாய் வீல்கள் கிடைக்கின்றன. பின்புறத்தில், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட எல்.ஈ.டி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்:
பல பெரிய மேம்படுத்தல்கள் உட்புறத்தின் தான் இடம்பெற்றுள்ளன. அதன்படி பெரிய 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், வாய்ஸ் அசிஸ்டட் பனோரமிக் சன்ரூஃப், மூட் லைட்கள், தனிப்பயனாக்கக்கூடிய தீம்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட சேமிப்பகத்துடன் கூடிய முன் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை அடங்கும். சஃபாரி முதல் மற்றும் 2வது வரிசையிலும் வெண்டிலேட்டர்களுடன் கூடிய இருக்கைகளைப் பெறுகிறது. புதிய நெக்ஸானைப் போலவே , புதுப்பிக்கப்பட்ட ஹேரியர் மற்றும் சஃபாரி ஆகியவை புதிய டாடா லோகோவுடன் கூடிய புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலைப் பெறுகின்றன.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் NCAP-யின் 5 ஸ்டார்:
பொதுவாகவே டாடா கார்கள் பாதுகாப்பானவை மற்றும் நீடித்து நிலைத்து நிற்கக்கூடியவை என்ற நம்பகத்தன்மை பயனாளர்களிடையே நிலவுகிறது. இதற்கு Tiago, Punch மற்றும் Nexon போன்ற கார்களுக்கான உயர் Global NCAP பாதுகாப்பு மதிப்பீடுகள் சான்றாக உள்ளன. அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் விதமாக தான், புதிய ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களும் பாதுகாப்பு தொடர்பான NCAP பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளன.
குளோபல் NCAP ஆனது சஃபாரி மற்றும் ஹேரியரை முன்பக்க மற்றும் பக்கவாட்டு விபத்துகளின்போதான பாதுகாப்பு தொடர்பாகவும், மின்னணு சாதனங்களின் உதவிகள், வயது வந்தோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதசாரி பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் பரிசோதிக்கப்பட்டது. சோதனை செய்யப்பட்ட மாடல் 2,119 கிலோ எடையுள்ள 5-கதவு SUV மற்றும் இந்திய சந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சஃபாரி மற்றும் ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்துடன், புதிய பாதுகாப்பு உபகரணங்களான 7-ஏர்பேக்குகள், 17 செயல்பாடுகளுடன் கூடிய மேம்பட்ட ESP மற்றும் 11 ADAS அம்சங்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளன. சோதனை செய்யப்பட்ட கார் UN 129 மற்றும் GTR9 போன்ற பாதசாரி பாதுகாப்பு அமைப்புகளுடன் இணக்கமாக உள்ளது.
பரிசோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள்:
வயது வந்தோருக்கான பாதுகாப்பில், டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் மொத்தம் 33.05 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இது அதிகபட்ச உச்சவரம்பான 34 புள்ளிகளுக்கு மிக நெருக்கமாக உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் 45 புள்ளிகளைப் பெற்றுள்ளன. சஃபாரி மற்றும் ஹாரியர் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் சோதனையில் 15.047 புள்ளிகளையும், சைட் மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் சோதனையில் 16 புள்ளிகளையும் பெற்றன. குழந்தைப் பயணிகளின் பாதுகாப்பு மதிப்பீட்டில், ஹாரியர் மற்றும் சஃபாரி டைனமிக் ஸ்கோரில் 24/24 புள்ளிகளையும், CRS நிறுவலில் 12/12 புள்ளிகளையும், வாகன மதிப்பீட்டு மதிப்பெண்ணில் 9/13 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.