Mahindra XEV 9e: அடங்காத விற்பனை, லாங் ரேஞ்ச், கல்லா கட்ட மஹிந்திரா ஸ்கெட்ச் - 79 kWh பேட்டரியில் புதிய எடிஷன்
Mahindra XEV 9e Pack Three: மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9e மின்சார கார் மாடலில், லாங் ரேஞ்ச் கொண்ட புதிய வேரியண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Mahindra XEV 9e Pack Three: மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9e மின்சார கார் மாடலின் புதிய வேரியண்டில், லாங் ரேஞ்சுக்கான பேட்டரியும், அட்டகாசமான அம்சங்களையும் இணைக்க உள்ளது.
மஹிந்திரா XEV 9e-க்கு புது வேரியண்ட்:
மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9e கார் மாடலை, கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த கார், விரைவிலேயே சில உள்ளமையும் திருத்தங்களை பெற உள்ளது. இந்த நடவடிக்கையானது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கி, XEV 9e கார் மாடலை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற உள்ளது. தற்போதைய சூழலில் XEV 9e கார் மாடலானது பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலக்ட் மற்றும் பேக் த்ரீ ஆகிய வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இதில் முதல் மூன்று வேரியண்ட்கள் ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் வேரியண்டில் (59 KWh பேட்டரி பேக்) விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், பேக் த்ரீ மட்டும் லாங் ரேஞ்ச் வேரியண்டில் (79 KWh பேட்டரி பேக்) விற்பனை செய்யப்படுகிறது.
பேக் த்ரீ வேரியண்ட்களுக்கு அப்கிரேட்:
இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, பேக் த்ரீ செலக்டை (Pack Three Select) லாங் ரேஞ்ச் வேரியண்டாக மேம்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், XEV 9e கார் மாடல்களில் லாங் ரேஞ்ச் வேண்டும் என நினைக்கும் பயனாளர்கள் இனி பேக் த்ரீ கிரேடை நோக்கி கட்டாயமாக தள்ளப்படமாட்டார்கள். தற்போதைய லாங் ரேஞ்ச் வேரியண்டின் விலை ரூ.30.50 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திராவின் புதிய மின்சார கார் தொடர்பாக வெளியாகியுள்ள ஆவணம்
அதேநேரம், பேக் த்ரீ வேரியண்டானது ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் எடிஷனாகவும் அறிமுகப்படுத்த உள்ளதாம். இதன் மூலம் இந்த வேரியண்டை அணுகுவதும் எளிதாகும். அதாவது அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கிய, அதேநேரம் லாங் ரேஞ்ச் வேரியண்ட் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வேரியண்ட் நல்ல தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.
பேட்டரி விவரங்கள்:
XEV 9e கார்களின் ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் வாகனங்களானது ரியர் மவுண்டட் மோட்டாருடன் கூடிய, 59 KWh LFP பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளது. இது 228 குதிரைகளின் ஆற்றல் மற்றும் 380 Nm இழுவை திறனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 542 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. லாங் ரேஞ்ச் வேரியண்டானது ரியர் மவுண்டட் மோட்டாருடன் கூடிய, 79 KWh LFP பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளது. இது 282 குதிரைகளின் ஆற்றல் மற்றும் 380 Nm இழுவை திறனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 656 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
விலை விவரங்கள்:
| வேரியண்ட் | விலை |
| XEV 9e பேக் ஒன் ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் | ரூ.21.90 லட்சம் |
| XEV 9e பேக் டூ ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் | ரூ.24.90 லட்சம் |
| XEV 9e பேக் த்ரீ செலக்ட் ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் | ரூ.27.90 லட்சம் |
| XEV 9e பேக் த்ரீ செலக்ட் லாங் ரேஞ் | இன்னும் அறிமுகமாகவில்லை |
| XEV 9e பேக் த்ரீ ஸ்டேண்டர்ட் ரேஞ் | இன்னும் அறிமுகமாகவில்லை |
| XEV 9e பேக் த்ரீ லாங் ரேஞ் | ரூ.30.50 லட்சம் |
புதிய வேரியண்ட்களானது தற்போதுள்ள XEV 9e மாடலின் டாப் 2 வேரியண்ட்களுக்கு இடையே உள்ள, இடைவெளியை நிரப்பும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 28 முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். வரும் ஜுலை மாத தொடக்கத்திற்குள் இந்த புதிய வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விற்பனையில் அசத்தும் XEV 9e
மஹிந்திராவின் இரண்டு முற்றிலும் புதிய மின்சார எஸ்யுவி கார்கள் ஒரே நேரத்தில் அறிமுகமானாலும், BE 6 மாடலை காட்டிலும் XEV 9e தொடர்ந்து விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவற்றுக்கு இடையேயான விற்பனை விகிதம் 2-1 எனவும், சில சமயங்களில் 4-1 எனவும் வேறுபடுகிறது. முதல் நான்கு மாதங்களில் XEV 9e கார் மாடலில் 7,863 யூனிட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், BE 6 கார் மாடலில் 3 ஆயிரத்து 175 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
XEV 9e கவனம் ஈர்க்க காரணம் என்ன?
BE 6 கார் மாடல் காட்சி ரீதியாக அட்டகாசமாக காட்சியளிப்பதோடு, நகரம் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. ஆனால், XEV 9e காரானது நடைமுறைக்கு உகந்ததாகவும், காற்றோட்டமான இடவசதி மற்றும் வலுவான ரேஞ்ச் போன்ற காரணங்களால் அனைத்து தரப்பு மக்களாலும் அதிகம் விரும்பப்படுகிறது. டிரைவ்ஸ்ஸ் டிஸ்பிளே உட்பட மூன்று 12.3 இன்ச் ஸ்க்ரீன் செட்-அப், பிரீமியம் இண்டீரியர், எதிர்காலத்திற்கான வடிவமைப்புகள், ரேஞ்ச் குறித்து கவலைகொள்ளமால் வானம் ஓட்டும் அனுபவத்தை வழங்குவது போன்ற அம்சங்களும் பயனர்களை வெகுவாக கவர்கிறது. இந்த கார் மாடலானது இந்திய சந்தையில் டாடா ஹாரியர் மற்றும் BYD ATTO 3 ஆகிய மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.





















