Renault Duster 2026: மொத்தமாக மாறிய டிசைன், ஸ்டைலிஷ் லுக், ப்ரீமியம் அம்சங்கள் - ரெனால்ட் டஸ்டர் டீசர் - ஜன.26 லாஞ்ச்
Renault Duster 2026 Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முற்றிலும் புதிய டஸ்டர் கார் மாடலை, ஜனவரி 26ம் தேதி சந்தைப்படுத்த உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Renault Duster 2026 Launch: ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் கார் மாடலில், டிசைன் மற்றும் அம்சங்களில் என்ன எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ரெனால்டின் புதிய டஸ்டர் எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜனவரி 26ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டட உள்ள, புதிய டஸ்டர் காருக்கான டீசரை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கனெக்டட் டெயில் லேம்ப்ஸ் மற்றும் முன்புற எல்இடி பகல்நேரங்களிலும் ஒளிரும் விளக்குகளின் பட்டைக்கு நடுவே, ரெனால்டின் புதிய லோகோ இடம்பெற்று இருப்பதை காண முடிகிறது. மேலும், முதல் தலைமுறை டஸ்டர் எஸ்யுவி இந்திய சந்தையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் விதமாக, நாஸ்டாலஜியாவாக ஒட்டுமொத்த டீசரும் உருவாக்கப்பட்டுள்ளது. மலைகள், காடுகள், கரடுமுரடான சாலைகள், நீர்வழிப்பாதைகள் ஆகியவற்றை டஸ்டர் கடந்துபோவதை போன்றும் காட்சிகள் இடம்பெறுள்ளன.
புதிய டஸ்டர் - முற்றிலும் புதிய டிசைன்:
ரெனால்டின் புதிய டஸ்டரானது CMF-B ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் புதிய டிசைன் மொழியை பெறுவதோடு, இந்திய சந்தையை சார்ந்த சில பிரத்யேக மாற்றங்களையும் கொண்டிருக்குமாம். புதியதாக வடிவமைக்கப்பட்ட க்ரில், Y வடிவிலான எல்இடி முகப்பு விளக்குகள், பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், புதிய ஃபாக் லேம்ப் அசெம்ப்ளி மற்றும் பெரிய ஏர் டேம்களுடன் கூடிய ஸ்போர்ட்டி பம்பர் ஆகியவற்றின் மூலம் முன்பு இருந்ததை காட்டிலும் முன்பக்கம் மிகவும் கம்பீரமாக இருக்க வாய்ப்புள்ளதாம். மேலும், Y வடிவிலான எல்இடி டெயில் லேம்ப்ஸ், 18 இன்ச் அலாய் வீல்கள், மிகப்பெரிய சைட் க்ளாடிங், வீல் ஆர்செஸ் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை டிசைன் அடிப்படையில் கவனத்தை ஈர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய டஸ்டர் - ப்ரீமியம் அம்சங்கள்
இந்திய சந்தைக்கான புதிய ரெனால்ட் டஸ்டரானது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் உள்ள கேபின் லே-அவுட் மற்றும் அம்சங்களை அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. முந்தைய தலைமுறையை காட்டிலும் புதிய எஸ்யுவி ஆனது மேம்படுத்தப்பட்டு ஏராளமான புதிய அம்சங்களை கொண்டிருக்குமாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களுக்கான பட்டியலில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் கலர் ட்ரைவர் டிஸ்பிளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்ட் ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேட், பனோரமிக் சன்ரூஃப், ஆர்கமிஸ் க்ளாசிக் 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை அடங்கும்.
புதிய டஸ்டர் - இன்ஜின் ஆப்ஷன்கள்
உள்நாட்டு சந்தையில் புதிய டஸ்டரானது 1.3 லிட்டர் டர்போ மற்றும் 1.2 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் என இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படலாம். சிறிய இடைவெளிக்குப் பிறகு வலுவான ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் இதில் இணைக்கப்படலாம். ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களையும் வழங்க வாய்ப்புள்ளதாம். டாப் எண்ட் வேரியண்ட்களுக்கு 4X4 ட்ரைவ்ட்ரெயின் வசதி எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டஸ்டர் - விலை, போட்டி
உள்நாட்டு சந்தையில் புதிய டஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது, ஹூண்டாயின் க்ரேட்டா, டாடா சியரா , கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகன் ஆகியவற்றுக்கு எதிராக போட்டியிட உள்ளது. இதன் விலை சுமார் 10 லட்சத்தில் தொடங்கி ரூ.20 லட்சம் வரை நீளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















