Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
Citroen Car Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும், ஜுன் மாதத்தில் பெரும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Citroen Car Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் கார்களுக்கு, ஜுன் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.2.8 லட்சம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்ரோயன் அறிவித்த அதிரடி சலுகைகள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் முழுமையடைவதை ஓட்டி, சிட்ரோயன் நிறுவனம் தனது கார் மாடல்களின் மீது வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியாத சலுகைகளை அறிவித்துள்ளது. தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து கார்களுக்கு அபரிவிதமான சலுகைகளை வழங்கியுள்ளதோடு, ஏற்கனவே உள்ள பயனாளர்களுக்கு பல்வேறு மலிவு விலை சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது கார் பிரியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ரெஞ்ச் ஸ்டைல் மற்றும் பணத்திற்கு நிகரான காரை வாங்க விரும்பினால், அதற்கான சரியான நேரமாக இந்த ஜுன் மாதம் திகழ்கிறது.
4வது ஆண்டு விழா சலுகைகள்:
நான்காவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை குறிக்கும் விதமாக தனது அனைத்து கார் மாடல்கள் மீதும், ரூ.2.80 லட்சம் என்ற சலுகையை சிட்ரோயன் அறிவித்துள்ளது. குறுகிய காலத்திற்கான இந்த சலுகையானது வரும் ஜுன் மாதம் 30ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். விலை குறைப்பு நடவடிக்கை மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச கார் ஸ்பா வசதியை வழங்குகிறது. புதிய மற்றும் பழையை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக முன்னெடுக்கப்பட்டுள்ள, சிட்ரோயனி நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எந்தெந்த கார்களுக்கு சலுகை:
குறுகிய காலத்திற்கான இந்த சலுகை பட்ஜெட் வாகனமான eC3, பசால்ட், C3X,C3, ஏர்கிராஸ் மற்றும் டாப் எண்ட் C5 ஏர்கிராஸ் என அனைத்து சிட்ரோயன் கார்களுக்கும் பொருந்தும். இவை பட்ஜெட்டில் அடங்கும் எண்ட்ரி லெவல் கார்கள் தொடங்கி டாப் எண்ட் எஸ்யுவிகள் வரை ஆகும். eC3 கார் மாடலின் விலை ரூ.12.76 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. பசால்ட் கார் மாடலின் விலை ரூ.8.25 லட்சத்தில் தொடங்கி ரூ.14.1 லட்சம் வரை நீள்கிறது. டாப் எண்ட் C5 ஏர்கிராஸ் விலை ரூ.39.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இவற்றின் மீதான சலுகையானது மாடல் மற்றும் டீலர்களின் வசம் உள்ள மாடல்களின் கையிருப்பு அடிப்படையிலானதாகும்.
சரிந்த விற்பனை:
C3 ஹேட்ச்பேக், eC3 எலெக்ட்ரிக், C3 ஏர்கிராஸ் எஸ்யுவி மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் கூபே என சிட்ரோயனின் போர்ட்ஃபோலியோ விரிவடைந்தாலும், நிறுவனத்தின் மாத விற்பனை சரிந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்தமே 333 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதன்படி, கடந்த மாதத்தில் C3 கார் 110 யூனிட்களும், பசால்ட் கார் 95 யூனிட்களும், C3 ஏர்கிராஸ் 66 யூனிட்களும், eC3 கார்கள் 60 யூனிட்களும் மற்றும் C5 ஏர்கிராஸ் 2 யூனிட்களுமே விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 515 யூனிட்களை விற்று இருந்தது.அதைவிட கடந்த மே மாத விற்பனை 35 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்திலும் அந்நிறுவனம் 339 யூனிட்களை மட்டுமே விற்று இருந்தது. இப்படி இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் தான், கார் மாடல்களின் மீது சிட்ரோயன் அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது.





















