Maruti Hybrid Cars: லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
Maruti Hybrid Cars: இந்தியாவில் கார் விற்பனையில் மீண்டும் 50 சதவிகித சந்தை பங்களிப்பை சொந்தமாக்க, மலிவு விலை ஹைப்ரிட் கார்களை சந்தைப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Maruti Hybrid Cars: மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஹைப்ரிட் கார் 35 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும்..!
இந்திய கார் சந்தையில் வீழ்த்த முடியாத வலுவான போட்டியாளராக மாருதி சுசூகி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஒரு காலத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தை பங்களிப்பை கொண்டிருந்த அந்த நிறுவனம், தற்போது அதிகரித்து வரும் போட்டி காரணமாக சுமார் 40 முதல் 43 சதவிகிதத்திற்கு சரிவை கண்டுள்ளது. அதிலிருந்து மீண்டு மீண்டும் 50 சதவிகித பங்களிப்பை எட்டுவதற்காக, பலதரப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்களுடன் புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் ப்ராண்டின் முதல் மின்சார கார் மாடலான இ-விட்டாரா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வரும் 5ம் தேதி ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார் மாடலையும் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்ததாக, தனது சொந்தத் தயாரிப்பான ஹைப்ரிட் பவர்ட்ரெய்னை அறிமுகப்படுத்தி, வெகுஜன சந்தையைக் குறிவைத்து ஹைப்ரிட் பிரிவிலும் வலுவான இடத்தை பிடிக்க மாருதி முனைப்பு காட்டி வருகிறது.
மாருதியின் ஹைப்ரிட் தொழில்நுட்பம்
HEV என்ற கோட்நேமை கொண்ட மாருதி சுசூகியின் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பம், தற்போது க்ராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ கார்களில் பயன்படுத்தப்படும் டொயோட்டாவின் சீரிஸ்-பேரலல் ஹைப்ரிட் சிஸ்டத்தை விட மலிவு விலையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, மாருதியானது தனது சக்திவாய்ந்த ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை புதிய Z12E, மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்க வாய்ப்புள்ளது. இந்த அமைப்பில், பெட்ரோல் இன்ஜின் ஒரு ஜெனரேட்டராகச் செயல்பட்டு (1.5kWh முதல் 2kWh வரையிலான) பேட்டரி பேக்கை சார்ஜ் செய்யும். அதே நேரத்தில் மின்சார மோட்டார் முன் சக்கரங்களை இயக்கும்.
மாருதி ஹைப்ரிட் கார்கள் - மைலேஜ் விவரங்கள்
YTB என்ற கோட்நேமை கொண்ட புதிய மாருதி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது, 2027-ல் புதிய HEV ஹைப்ரிட் பவர்ட்ரெய்னுடன் அறிமுகமாகும் ப்ராண்டின் முதல் மாடலாக இருக்க வாய்ப்புள்ளதாம். அதனை தொடர்ந்து அடுத்த தலைமுறை மாருதி பலேனோ மற்றும் HEV சீரிஸ் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 4 மீட்டருக்கும் குறைவான MPV ஒன்றையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம். புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ப்ரேஸ்ஸா ஆகியவையும் 2029-க்குள் புதிய ஹைப்ரிட் பவர்ட்ரெய்னைப் பெறுமாம்.
மாருதி சுசூகியின் HEV ஹைப்ரிட் கார்கள், சோதனை ஓட்டத்தில் சுமார் 35 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம், ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய உமிழ்வு விதிகளுக்கு இணக்கமாக இருக்கும். வெகுஜன சந்தைக்கான மாருதியின் புதிய வலிமையான ஹைப்ரிட் வாகனங்களானது, மற்ற ப்ராண்டுகளால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ஹைப்ரிட் கார் மாடல்களுக்கு கடும் போட்டியாக மாறக்கூடும்.
மாருதியின் எதிர்பார்ப்பு
இந்தோ-ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி 2030ம் ஆண்டு இறுதிக்குள் 6-க்கும் அதிகமான சக்திவாய்ந்த ஹைப்ரிட் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம், தனது சொந்த HEV 1.2L சீரிஸ் ஹைப்ரிட் மற்றும் டொயோட்டாவின் 1.5L பேரலல்-ஹைப்ரிட் பவர்ட்ரெய்ன் உள்ளிட்ட ஹைப்ரிட் மாடல்கள் மூலம், ஆண்டுக்கு கிட்டத்தட்ட எட்டு லட்சம் யூனிட்கள் அல்லது அதன் மொத்த விற்பனையில் 25 சதவிகிதத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹைப்ரிட் கார்கள் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், இந்த இலக்கை மாருதி சாத்தியப்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















