Maruti Suzuki car price hike 2023: பொங்கல் நாளில் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசுகி கார் நிறுவனம்.. எவ்வளவு தெரியுமா?
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை, 1.1% அளவிற்கு உயர்த்தி அறிவித்துள்ளது.
விலையை உயர்த்திய உற்பத்தி நிறுவனங்கள்:
கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் நீடித்த செமிகண்டக்டர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகள் போன்ற காரணங்களால், இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து பல்வேறு தகவல் வெளியாகின. அந்த வகையில், உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவற்றுடன், ஆடி, ரெனால்ட் , எம்ஜி மோட்டார் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார் நிறுவனங்களும், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்யும் வகையில், தங்களது பல்வேறு கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்தன.
1.1% அளவிற்கு விலை உயர்வு:
சமீபத்திய ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய விலை அழுத்தம் ஆகியவை விலையை உயர்த்தும் சூழலுக்கு தள்ளுவதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருந்தாலும், விலை உயர்வு எவ்வளவு என்பது குறித்து தெளிவுபடுத்தாமல் இருந்தது. இந்நிலையில், தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் 1.1% அளவிற்கு உயர்த்தி அறிவித்துள்ளது. இன்றைய நாள் முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை மாற்ற விவரம்:
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்-ஆர் மாடல் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களின் விலை உயர்வானது மாடலின் அடிப்படையில் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் குறைந்தபட்ச விலையில் ஆல்டோ 800 காரை ரூ.3.39 லட்சத்திற்கும், அதிகபட்ச விலைக்கு XL6 மாடல் காரை ரூ.14.55 லட்சத்திற்கும், விலையேற்றத்திற்கு முன்பு விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வை அறிவித்துள்ள மற்ற நிறுவனங்கள்:
ஜீப் இந்தியா நிறுவனம் தனது அனைத்து ஜீப் எஸ்யூவி வகைகளின் விலையையும் 2 முதல் 4% வரை உயர்த்த உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ICE மற்றும் EV மாடல் கார்களின் விலை தற்போதைய விலையிலிருந்து இரண்டு சதவீதம் வரை விலை உயர்வைக் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கியா இந்தியா நிறுவனம் தனது ஆட்டோமொபைல்களின் விலை ரூ.50,000 வரை உயர்த்தப்படும் எனவும், புதிய விலை உயர்வு வரும் ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான Mercedes-Benz தனது கார் மாடல்களின் விலையை 5% அளவிற்கும்,
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எஸ்யூவியின் விலையை ரூ.90,000 வரையும் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளன. இதேபோன்று, ஆடி இந்தியா நிறுவனமும் வரும் ஜனவரி 2023 முதல், கார் விலையை 1.7% வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களின் வரிசையில், ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான ஹோண்டா நிறுவனம் தனது சில கார் மாடல்களின் விலையை ரூ. 30,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் மாடல்களின் அடிப்படையில் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை உயர்வானது விரைவில் அமலுக்கு வரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.