Maruti Suzuki: ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கு மொத்தமாக ஆஃபர் - விலையை குறைத்த மாருதி சுசுகி..!
Maruti Suzuki: மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது அனைத்து ஆட்டோமேடிக் கார் மாடல்களுக்குமான விலையை குறைத்து அறிவித்துள்ளது.
Maruti Suzuki: மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து ஆட்டோமேடிக் கார் மாடல்களுக்குமான விலை, ரூ.5,000 குறைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி விலை குறைப்பு:
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள, அனைத்து ஆட்டோமேடிக் கார் வேரியண்ட்களின் விலையையும் அதிரடியாக குறைத்துள்ளது. இத்தகையை வாகனங்களை அந்நிறுவனம் ஆட்டோ கியர் ஷிஃப்டர் என குறிப்பிடுகிறது. அவற்றின் விலையை ரூ.5000 வரை குறைத்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
எந்தெந்த மாடல்களுக்கு விலை குறைப்பு?
விலை குறைப்பு நடவடிக்கையானது ஜுன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலெரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசைர், பலேனோ மற்றும் இக்னிஸ் ஆகிய மாடல்களுக்கு விலை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. விலை திருத்த நடவடிக்கையின்படி மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆட்டோமேடிக் கார் ரேஞ்சானது, Alto K10 VXi AGS-ல் இருந்து தொடங்குகிறது. இதன் விலை 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இந்த ரேஞ்சில் மிகவும் விலையுயர்ந்த கார் மாடலாக இருப்பது Alpha AGS ஆகும். இதன் விலை 9 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
சரிந்த மாருதி சுசுகி விற்பனை
மாருதியின் போர்ட்ஃபோலியோவில் உள்ள சிறிய கார்கள் மட்டுமே AMT விருப்பத்தைப் பெறுகின்றன. எர்டிகா, பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா மற்றும் ஜிம்னி போன்ற அனைத்து பெரிய சலுகைகளும் வழக்கமான, தானியங்கி டிரான்ஸ்மிஷன் விருப்பத்தை மட்டுமே பெறுகின்றன. மாருதியின் எண்ட்ரி லெவல் மற்றும் கச்சிதமான ஹேட்ச்பேக்குகளின் விற்பனை மே மாதத்தில் குறைந்துள்ளது. கடந்த மாதத்திற்கான விற்பனை அறிக்கையில், மாருதி சுசூகி தனது சிறிய கார் மாடல்களில் 78,108 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீதம் வீழ்ச்சியாகும். இந்த நிலையில் தான் மாருதி சுசுகி நிறுவனம், தனது ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் விலை குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாருதியின் 2025 இலக்கு?
நடப்பாண்டில், மாருதி சுசூகி நிறுவனம் அனைத்து வகையிலும் புத்துயிர் பெற்ற தனது ஸ்விஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய தலைமுறை டிசையர் சப்காம்பாக்ட் செடான் பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் பிற்பகுதியில், மாருதி அதன் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பதிப்பையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கான்செப்ட் வடிவத்தில் EVX என காட்சிப்படுத்தப்பட்டது. எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.