Mahindra Sales Sep 2025: டாப் கியரில் மஹிந்த்ரா.. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்ச விற்பனை - எஸ்யுவிக்கள் ஆதிக்கம்
Mahindra Sales Sep 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனம் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்ச கார் விற்பனையை பதிவு செய்துள்ளது.

Mahindra Sales Sep 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனம் இதுவரை இல்லாத அளவில், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஒரு லட்சம் யூனிட்களை கடந்த மஹிந்த்ரா விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனம் இதுவரை இல்லாத அளவில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 298 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் பதிவானதை காட்டிலும், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து 19 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. பயணிகள் வாகன பிரிவில் உள்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனை ஆன 51 ஆயிரத்து 62 யூனிட்களை காட்டிலும், 10 சதவிகிதம் அதிகரித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் 56 ஆயிரத்து 233 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மஹிந்த்ரா
உள்நாட்டில் மஹிந்திரா நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச விற்பனை இதுவாகும். ஏற்றுமதியுடன் சேர்த்து கடந்த மாத விற்பனையானது 58 ஆயிரத்து 714 யூனிட்களாக பதிவாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவான ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 962 யூனிட்களை காட்டிலும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 503 யூனிட்களாக பதிவாகியுள்ளது. விழாக்காலத்தில் அதிகரித்த வாங்கும் திறன் மற்றும் ஜிஎஸ்டி திருத்தத்தால் ஏற்பட்ட விலைக்குறைப்பு வாகன விற்பனையை ஊக்குவித்துள்ளது. அதோடு, எஸ்யுவிக்களின் மீதான மோகம், அந்த பிரிவில் மஹிந்த்ரா நிறுவனம் மீதான நம்பிக்கையுமே புதிய உச்சத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. விரைவில் மஹிந்த்ராவின் எந்த கார் மாடல், செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனையானது என்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக வாகனங்களின் விற்பனை:
வணிக பயன்பாடுகளுக்கான வாகன பிரிவும் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தை காட்டிலும், 19 சதவிகிதம் அதிகரித்து 26 ஆயிரத்து 728 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 30 சதவிகிதம் அதிகரித்து 13 ஆயிரத்து 17 யூனிட்களை விற்பனையாகியுள்ளன. ஏற்றுமதியிலும் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட 3 ஆயிரத்து 20 யூனிட்களை காட்டிலும், 43 சதவிகிதம் அதிகரித்து 4 ஆயிரத்து 320 யூனிட்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது சர்வதேச சந்தைகளிலும் மஹிந்த்ரா நிறுவனத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருப்பதை காட்டுகிறது.
ஒட்டுமொத்த விற்பனை விவரம்:
பயணிகள் மற்றும் வணிக வாகனனங்களை சேர்த்து கடந்த செம்டம்பர் மாதத்தில் மஹிந்த்ரா நிறுவனம் 95 ஆயிரத்து 978 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் செப்டம்பரை காட்டிலும் 11 சதவிகிதம் அதிகமாகும். ஏற்றுமதியுடன் சேர்த்து கடந்த செப்டம்பரில் ஒரு லட்சத்து 298 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் இதேகாலகட்டத்தில் பதிவான, 86 ஆயிரத்து 578 யூனிட்களை காட்டிலும் 16 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த சாதனையை தொடர்ந்து மஹிந்த்ரா நிறுவனம், அக்டோபர் மாதத்தில் மஹிந்த்ரா தார் 3 டோர், பொலேரோ மற்றும் பொலேரோ நியோ ஆகிய கார் மாடல்களை அடுத்தடுத்து சந்தைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





















