Mileage Cars: மிடில் க்ளாஸ் மக்களுக்கான வரம்.. 35 கி.மீ., மைலேஜ், மார்கெட்டிலேயே கம்மி விலை - டாப் 5 மாடல்கள்
CNG Mileage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய சிஎன்ஜி கார் மாடல்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

CNG Mileage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 5 சிஎன்ஜி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள்:
பட்ஜெட்டில் கார் வாங்கும் நபர்களுக்கு, சிஎன்ஜி ஆப்ஷன் எரிபொருள் செலவை குறைப்பதற்கான ஒரு நல்ல தேர்வாக உள்ளது. பல கார் தயாரிப்பாளர்களும் சிறிய கொள்ளளவு கொண்ட டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை நிறுத்தியதால், பட்ஜெட் கார் வாங்குபவர்களுக்கு CNG அதிக அளவில் விருப்பமான தேர்வாக மாறி வருகிறது. பெட்ரோல் இன்ஜின்களை விட CNG கார்கள் அதிக விலை கொண்டவையாக் இருந்தாலும், இயக்க செலவுகள் கணிசமாகக் குறைவாக இருப்பதால், நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக திகழ்கிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் மலிவு விலையில் அதிக மைலேஜ் தரக்கூடியதாக கிடைக்கும் 5 சிஎன்ஜி கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மைலேஜில் டாப் 5 சிஎன்ஜி கார்கள்:
5. மாருதி சுசூகி ஸ்விஃப்ட்
மாருதி சுசூகியின் பிரபலமான கார் மாடலான ஸ்விஃப்டின் சிஎன்ஜி எடிஷன், 8.2 லட்சத்தில் தொடங்கி 9.20 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரானது VXi, VXi (O) மற்றும் ZXi ஆகிய 3 ட்ரிம்களில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z12 பெட்ரோல் இன்ஜினை கொண்டு, 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் இயக்கப்படுகிறது. அதன் மூலம் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக மாருதி சுசூகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மாருதி சுசூகி டிசையர்
மாருதியின் புதிய தலைமுறை டிசையர் கார் மாடலின் விலையானது 8.79 லட்சத்தில் தொடங்கி 9.89 லட்சம் வரை நீள்கிறது. VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் இந்த சிஎன்ஜி எடிஷன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு செடான் கார் மாடலான டிசையர், ஸ்விஃப்டில் உள்ள அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z12 பெட்ரோல் இன்ஜினை 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் இயக்குகிறது. ஒரு ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. வடிவில் சற்றே பெரியதாக இருந்தாலும், ஸ்விஃப்டை காட்டிலும் டிசையர் கூடுதல் மைலேஜை வழங்குகிறது.
3. மாருதி சுசூகி ஆல்டோ K10
அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 3 கார்களின் பட்டியலை பார்க்கும்போது, ஆல்டோ K10 கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை கொண்டு, ஒரு கிலோவிற்கு 33.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை கார் என்ற பெருமையை பெற்றுள்ள ஆல்டோ K10-ன் சிஎன்ஜி எடிஷனானது, இரண்டு ட்ரிம்களில் 5.90 லட்சத்தில் தொடங்கி 6.21 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மலிவு விலை காரும் இதுவே ஆகும்.
2. மாருதி சுசூகி வேகன் - ஆர்:
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக உள்ள வேகன் ஆர், சிஎன்ஜி எடிஷனில் அதிக மைலேஜ் வழங்கும் வாகனமாகவும் உள்ளது. நிறுவனத்தின் தகவல்களின்படி, ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதற்காக இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. LXi மற்றும் VXi என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும் இந்த காரானது, 6.69 லட்சத்தில் தொடங்கி 7.13 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
1. மாருதி சுசூகி செலேரியோ
சிஎன்ஜி எடிஷனில் அதிக மைலேஜ் தரக்கூடிய கார்களின் பட்டியலில் செலேரியோ, முதலிடம் பிடித்து அசத்துகிறது. இந்த ஹேட்ச்பேக்கானது அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் சிலிண்டரை கொண்டுள்ளது. முந்தைய இரண்டு கார்களில் உள்ள அதே இன்ஜின் தான், செலேரியோவிலும் இடம்பெற்றுள்ளது. ஆனாலும், இந்த கார் கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. ஆல்டோ கே10 மற்றும் எஸ்-ப்ரெஸ்ஸோ கார்களை காட்டிலும் பெரியதாக இருந்தாலும் அதிக மைலேஜ் வழங்குகிறது. VXi எனும் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் இந்த காரானது 6.9 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.





















