Revolt RV400 Electric Bike: இந்தியாவில் மீண்டும் ஒரு லிமிடெட் எடிஷன் பைக்..ரெவோல்ட் ஆர்வி 400 மின்சார பைக் சிறப்பம்சங்கள் இதோ..!
மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரெவோல்ட் தனது லிமிடெட் எடிஷன் இருசக்கர வாகனமான, ஆர்வி 400 மாடல் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரெவோல்ட் தனது லிமிடெட் எடிஷன் இருசக்கர வாகனமான, ஆர்வி 400 மாடல் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
லிமிடெட் எடிஷன்:
பல்வேறு விதமான மாடல்கள், வசதிகள் மற்றும் அம்சங்களில் வேறுபட்டு புதுப்புது கார்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் ஆட்டோமொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எண்ட்ரி லெவல் தொடங்கி, ஹை எண்ட் வரை என பல்வேறு வேரியண்ட்கள் உள்ளன. இவற்றில் இருந்து வேறுபட்டு உள்ள ஒரு பிரிவு தான் லிமிடெட் எடிஷன். இதில் அதிகப்படியான விலை மதிப்பில் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டுவரப்படும் வாகனங்கள் தனித்துவமாக விளங்கும் என்பதால், அவற்றை வாங்க வாகன பிரியர்கள் எப்போதும் தனி ஆர்வம் காட்டுவர். இந்த நிலையில் தான் பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ரெவோல்ட் தனது புதிய லிமிடெட் எடிஷன் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
ரெவோல்ட் ஆர்வி 400:
ரெவோல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய லிமிடெட் எடிஷன் மின்சார இருசக்கர வாகனம் ஆர்வி 400 ஸ்டெல்த் பிளாக் லிமிடெட் எடிஷன். ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் என கூறப்பட்டாலும் எத்தனை வாகனங்கள் தயாரிக்கப்படும் என்பது தொடர்பான தகவல் எதுவும் இதுரை வெளியாகவில்லை.
மாற்றங்கள் என்ன?
ஸ்டேண்டர்ட் எடிஷன் வாகனத்தில் இருந்து வெறும் காஸ்மெடிக் மாற்றங்களை மட்டுமே லிமிடெட் எடிஷன் வாகனம் பெற்றுள்ளது. அதன்படி, பைக்கின் பின்புற ஸ்விங்கார்ம், பின்புற கிராப் ஹேண்டில், மோட்டார்சைக்கிளின் ஃப்ரேமின் சில பகுதிகள் மற்றும் ஹேண்டில்பாரில் குரோம் டிரிம்கள் ஆகியவை கருப்பு நிறத்தில் உள்ளன. இது மஞ்சள் நிற மோனோ-ஷாக் மற்றும் பிளாக்-அவுட் அலாய் வீல்களுடன் தங்க நிற தலைகீழான முன் ஃபோர்க்குகளைப் பெற்றுள்ளது. பைக் ஸ்டீல்த் பிளாக் பெயிண்டிங்கையும், முன்பக்கத்தில் ஒரு சிறிய பிளாட் ஸ்கிரீனையும் பெறுகிறது.
இன்ஜின் மாற்றங்கள்:
ஏற்கனவே தெரிவித்தது போல லிமிடெட் எடிஷனின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்த மாடலிலும் 3.24 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 3 கிலோவாட் மிட்-டிரைவ் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. ரெவோல்ட் RV400 மாடல் ரைடிங் மோட்களுக்கு ஏற்ப முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சம் 4.5 மணி நேரம் வரை ஆகும்.
விலை விவரங்கள்:
ரெவோல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்டெல்த் பிளாக் ஆர்வி 400 எடிஷன் மாடலின் விலை ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை அதன் ஸ்டான்டர்டு எடிஷன் மாடலை விட 5 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ரெவோல்ட் நிறுவன டீலர்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணமாக 4 ஆயிரத்து 999 ரூபாய் வசூலிக்கபப்டுகிறது. தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் ரெவோல்ட் ஆர்வி400 லிமிடெட் எடிஷன் மாடலின் விநியோகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.