Car Sale July 2025: படுத்தேவிட்ட டாடா, மாருதிக்கே இப்படியா? மஹிந்திரா காட்டில் மழை - ஜுலை மாத கார் விற்பனை
Car Sale July 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் கார் உற்பத்தி நிறுவனங்களின், விற்பனை விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Car Sale July 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்திலும் டாடா நிறுவனத்தின் விற்பனை சரிவையே சந்தித்துள்ளது.
ஆட்டோமொபைல் விற்பனை விவரங்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்திலும் எந்தவித குறைகளும் இன்றி, பல புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதை சார்ந்து ஒவ்வொரு நிறுவனத்தின் விற்பனை விவரங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். ஒரு சில நிறுவனங்களுக்கு ஜுலை மாதம் பெரிய ஏற்றத்தை தந்திருந்தாலும், சில முன்னணி நிறுவனங்களுக்கு இது எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதன்படி, ஜுலை மாத பயணிகள் வாகன விற்பனை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மாருதி சுசூகி - சிறிய வளர்ச்சி
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, கடந்த ஜுலை மாதத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 776 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. இது கடந்த மாதம் விற்பனையான ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 906 வாகனங்களை விட சுமார் 18 ஆயிரம் யூனிட்கள் அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 463 யூனிட்களை விட மிகவும் குறைந்த எண்ணிககியிலான வளர்ச்சியே ஆகும். நிறுவனத்தின் காம்பேக்ட் செக்மெண்டில் உள்ள பலேனோ, செலேரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் ஆகிய கார் மாடல்களின் விற்பனை மட்டுமே வளர்ச்சியை கண்டுள்ளன. மற்ற அனைத்து மாடல்களுமே விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. இருப்பினும் ஒட்டுமொத்த விற்பனையில் மாருதி சுசூகி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
2. மஹிந்திரா காட்டில் மழை
மஹிந்திர நிறுவனம் கடந்த ஆண்டின் ஜுலை மாதத்தில் பதிவான விற்பனையை காட்டிலும், 26 சதவிகிதம் கூடுதல் விற்பனையை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 83 ஆயிரத்து 691 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 49 ஆயிரத்து 871 எஸ்யுவி யூனிட்கள் விற்பனையாகி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவிகிதம் ஆகும். BE6 மற்றும் XEV 9E கார் மாடல்களின் பேக் டூ வேரியண்ட்களின் விநியோகம் தொடக்கம் மற்றும் XUV 3XO REVx லைன் கார் மாடலின் அறிமுகம் ஆகியவை நிறுவன வளர்ச்சியை ஊக்குவித்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
3. ஹுண்டாய் - விற்பனையில் சரிவு
ஹுண்டாய் நிறுவனம் கடந்த ஜுலை மாததில் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்து 73 யூனிட்களை பதிவு செய்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனையான 43 ஆயிரத்து 973 யூனிட்களும், ஏற்றுமதி செய்யப்பட்ட 16 ஆயிரத்து 100 யூனிட்களும் அடங்கும். கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் விற்பனையான 64 ஆயிரத்து 563 யூனிட்களை காட்டிலும் இந்த எண்ணிக்கை 6.9 சதவிகிதம் குறைவாகும். உள்நாட்டில் நிறுவனத்தின் விற்பனையில் எஸ்யுவி வாகனங்களின் பங்கு மட்டும் 71.8 சதவிகிதமாகும்.
4. டாடா - மின்சார வாகன விற்பனையில் சாதனை
டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை கடந்த ஜுலை மாதம் 12 சதவிகிதம் சரிந்து, 39 ஆயிரத்து 521 யூனிட்களாக பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 44 ஆயிரத்து 725 யூனிட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் 229 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அது 654 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுபோக கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 124 மின்சார கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஒரு மாதத்தில் இந்தியாவில் இந்த அளவிற்கு மின்சார வாகனங்களை ஒரு நிறுவனம் விற்பனை செய்தது இதுவே முதல்முறையாகும். அதேநேரம், நிறுவனத்தின் இன்ஜின் அடிப்படையிலான விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது நினைவுகூறத்தக்கது.
5. டொயோட்டா - தொடர் வளர்ச்சி
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஜுலையில் 32 ஆயிரத்து 575 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு சந்தையில் விற்பனையான 29 ஆயிரத்து 159 யூனிட்களும், ஏற்றுமதி செய்யப்பட்ட 3 ஆயிரத்து 416 யூனிட்களும் அடங்கும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 31 ஆயிரத்து 656 யூனிட்களை காட்டிலும் 3 சதவிகித விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாகவே, டொயோட்டோ நிறுவன விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னோவா, ஃபார்ட்சுனர், க்ளான்ஸா மற்றும் ஹைரைடர் கார் மாடல்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
6. கியா - தொடர்ந்து ஏறுமுகம்
தென்கொரிய நிறுவனமாக கியா இந்திய சந்தையில் தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜுலை மாதத்தில் பதிவான 20 ஆயிரத்து 507 யூனிட்களை காட்டிலும், 8 சதவிகிதம் அதிகரித்து கடந்த மாதம் கியாவின் 22 ஆயிரத்து 135 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதோடு, கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் விற்பனையான ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 644 யூனிட்களை காட்டிலும், நடப்பாண்டில் அதே காலகட்டத்தில் 11.45 சதவிகித வளர்ச்சி கண்டு, கியாவின் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 439 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
7. MG மோட்டார்ஸ் - இதுவரையில்லாத விற்பனை
எம்ஜி நிறுவனம் கடந்த ஜுலை மாதத்தில் 6 ஆயிரத்து 678 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனம் சார்பில் இந்திய சந்தையில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச விற்பனை இதுவாகும். கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் பதிவான 4 ஆயிரத்து 575 யூனிட் விற்பனையை காட்டிலும் 46 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் விண்ட்சர் கார் மாடல் மின்சார பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.





















