Luxury Car Sales: இந்தியாவில் புதிய உச்சம்தொட்ட சொகுசு கார் விற்பனை..! முதலிடம் எந்த ரேஞ்ச் தெரியுமா?
luxury car sales: இந்தியாவில் சொகுசு கார் விற்பனை கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

luxury car sales: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில், சொகுசு கார் விற்பனை 50 ஆயிரம் யூனிட்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொகுசு கார் விற்பனை:
நடப்பாண்டில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சொகுசு கார் விற்பனை முதன்முறையாக 50,000-யூனிட் விற்பனையைக் கடக்க உள்ளது. முக்கிய உற்பத்தி நிறுவனங்கள் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், கடந்த ஆண்டில் 20 சதவிகிதத்திற்கும் மேலாக, அதாவது ஆடம்பர கார் சந்தையானது பிரதான கார் சந்தையின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் சுமார் 47,000 யூனிட் சொகுசு கார்கள் கடந்த ஆண்டு விற்பனையாகி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சொகுசு கார் விற்பனையில் முதலிடம் யாருக்கு?
நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான, Mercedes-Benz 2023 ஆம் ஆண்டில் 17,400 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்து, 10 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அந்நிறுவனம் ஓராண்டில் பதிவு செய்த அதிகபட்ச விற்பனை இதுவாகும். பிஎம்டபிள்யூ இந்தியா தனது விற்பனையில் 18 சதவிகித வளர்ச்சியை கண்டு, 14,172 கார்களை விற்பனை செய்துள்ளது . BMW, Mini மற்றும் BMW Motorrad ஆகிய மூன்று BMW குரூப் பிராண்டுகளும் - இந்தியாவில் அக்குழுமத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பதிவு செய்தன. ஆடி இந்தியா நிறுவன விற்பனை 90 சதவிகிதம் உயர்ந்து சுமார் 9,000 யூனிட்களை விற்பனை செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
எந்த பிரிவில் வாடிக்கையாளர்கள் ஆர்வம்?
1.5 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் அடங்கும் சொகுசு கார்களை வாங்க, இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு உதாரணமாக தான், 1 கோடி-1.5 கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள டாப்-எண்ட் வாகனப் பிரிவில், பிஎம்டபிள்யூ இந்தியா 88 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேசமயம் ஆடி இந்தியாவின் விற்பனை 40 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த விலை பிரிவில் Mercedes-Benz இன் ஸ்டேண்டர்ட் S-Class , GLS , Maybachs மற்றும் AMG போன்ற மாடல்கள் அடங்கும். BMW இந்தியா 7 சீரிஸ் , i7 , X7 மற்றும் XM போன்ற மாடல்களையும், Audi இந்தியா A8 , Q8 , RS5 மற்றும் e-tron ஆகிய மாடல்களையும் விற்பனை செய்கிறது.
குறையும் வாடிக்கையாளர்கள் வயது:
சொகுசு கார் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருவது, நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை உணர்த்துவதாக, கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதோடு, இந்திய மக்கள்தொகையின் சராசரி வயதைப் போலவே, இந்தியாவில் சொகுசு கார்களை வாங்குபவர்களும் இளமையாகி வருகின்றனர். காரணம் சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள S-கிளாஸ் மற்றும் GLS போன்ற அதன் டாப்-ஆஃப்-லைன் வாகனங்களை வாங்குபவர்களின் வயது 45 ஆண்டுகளில் இருந்து 38 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

