Highest Price EV: நாட்டின் விலையுயர்ந்த மின்சார கார் - தாறுமாறாக களமிறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்
Rolls-Royce Spectre: நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மின்சார காராக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Rolls-Royce Spectre: நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மின்சார கார் எனும் அந்தஸ்தை பெற்றுள்ள, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஸ்பெக்டர் மாடலின் விலை இந்திய சந்தையில் 7 கோடியே 50 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் விலையுயர்ந்த மின்சார:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சொகுசு கார்களுக்கு பெயர் போன ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்தின், புதிய மின்சார கார் மாடலான ஸ்பெக்டர் (Spectre) இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. அந்நிறுவனத்தின் முழுமையான முதல் சொகுசு மின்சார காரான இந்த கூபே மாடலின், தொடக்க விலையே 7 கோடியே 50 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த மின்சார கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் வடிவமைப்பு:
பிரிட்டிஷ் சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் இந்த ஸ்பெக்டர் மின்சார கார் எதிர்காலத்திற்கான வடிவமைப்புகளை கொண்டுள்ளது. சில பகுதிகளில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கே உரிய முக்கிய வடிவமைப்பு நெறிமுறைகளைப் தொடர்கிறது. அதேநேரம், மின்சார வாகனங்களுக்கே உரித்தான பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களையும் ஏற்றுள்ளது. உதாரணமாக, மின்சார வாகனமான ஸ்பெக்டர் அதிக மைலேஜ் பெறுவதற்கு ஏற்ப ஏரோடைனமிக் அடிப்படையில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார் மாடல்களில் இதுவரை பொருத்தப்படாத அளவிலான, அகலமான கிரில் ஸ்பெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ளது. அதோடு, ஸ்பிலிட்டட் ஹெட்லைட் ட்ரீட்மென்ட் மற்றும் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி ஃபிகரும் கூட ஏரோ-டியூன் செய்யப்பட்டுள்ளது.
5 மீட்டர் நிள கார்:
5 மீட்டர் நீளத்தில் இது ஒரு பெரிய காராக இருந்தாலும், இரண்டு கதவுகளை மட்டுமே கொண்டுள்ளது. அதேநேரம், மிகப்பெரிய 23 இன்ச் ஏரோ ஆப்டிமைஸ்ட் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 22 எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் ரேக்ட் புரொஃபைல் மூலம், மற்ற ரோல்ஸ் ராய்ஸ்களை விட கூடுதலான ஸ்போர்ட்டி தோற்றத்தை ஸ்பெக்டர் பெற்றுள்ளது. பின்புறம் ஒரு சாய்வான தோற்றத்தை கொண்டுள்ளதோடு, விளக்குகள் நகை போன்ற ஒளிருகின்றன. அதே நேரத்தில் ஒட்டுமொத்த வடிவமைப்பும் பார்வையாளர்களின் கவனத்த ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான ரோல்ஸ் ராய்ஸைப் போலவே, ஸ்பெக்டரின் உட்புறத்திலும் ஸ்டார்லைட் ஹெட்லைனர் உள்ளது. ஆனால் இதில் அதிக அளவு தனிப்பயனாக்கலுடன் கதவுகள் வரை செல்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மின்சார கார்
பேட்டரி விவரங்கள்:
ஸ்பெக்டர் ரோல்ஸ் ராய்ஸின் மிகவும் ஆற்றல்மிக்க மாடலாக இருக்கும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த மாடல் இன்னும் நிலையான ஏர் சஸ்பென்ஷனைக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்கள் என்றாலே அதன் ரேஞ்ச் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில், ஸ்பெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ள 102kWh பேட்டரி பேக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 530 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான தோற்றத்தை கொண்டிருந்தாலும், 900Nm டார்க்கை உருவாக்கும் இந்த கார் மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5 விநாடிகளில் எட்டுகிறது. தொழில்நுட்பம் என்று பார்க்கையில், ஸ்பெக்டரில் கனெக்டட் கார் அம்சம் உள்ளது. நான்கு பேர் பயணிப்பதற்கான இட வசதியுடன், பிஸ்போக் தொழில்நுட்ப அம்சமும் இடம்பெற்றுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மின்சார கார்