Hyundai Off Roader: தாருக்கே சங்கா? கட்டுமஸ்தான ஆஃப் ரோடர் SUV, ஹுண்டாயின் முதல் கார் எப்படி இருக்கும்?
Hyundai Off Roader: ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் தனது முதல் ஆஃப்-ரோடர் கார் மாடலை விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Hyundai Off Roader: ஹுண்டாயின் முதல் ஆஃப்-ரோடர் கார் மாடல், இந்தியாவில் மஹிந்த்ராவின் தார் உடன் நேரடியாக மோத உள்ளது.
ஹுண்டாயின் முதல் ஆஃப்-ரோடர் கார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது நம்பகமான கார் மாடல்கள் மூலம், ஹுண்டாய் நிறுவனம் வலுவான இடத்தை பிடித்துள்ளது. அதனை மேலும் விரிவுபடுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதலீட்டார்கள் மத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் 7 முற்றிலும் புதிய கார் மாடல்கள் உட்பட 30 புதிய மாடல்களை சந்தைப்படுத்த உள்ளதாக ஹுண்டாய் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் எம்பிவி மற்றும் ஆஃப் - ரோட் திறன்கொண்ட எஸ்யுவி பிரிவில் முதல்முறையாக தங்களது மாடல்களை சந்தைப்படுத்த உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பிரிவுகளில் ஹுண்டாய் நிறுவனம் முதல்முறையாக வெளியிட உள்ள கார் தொடர்பான அறிவிப்பு ஆட்டோமொபைல் சந்தையில் பேசுபொருளாகியுள்ளது.
மஹிந்த்ராவின் தாருக்கே சங்கா? - லேடர் ஃப்ரேம் எஸ்யுவி?
ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி ஆனது கட்டுமஸ்தான உடல்வாகுவை கொண்டு, ஆஃப்-ரோட் செயல்திறனை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ப்ராண்டின் சர்வதேச சந்தை மாடல்களை அலசினாலும், இதுவரை ஒரே ஒரு முறையான 4X4 ட்ரைவ்ட்ரெயின் ஆப்ஷன் கொண்ட லேடர் ஃப்ரேம் எஸ்யுவி கூட நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் இல்லை. இதனால் மஹிந்த்ராவின் தார் மற்றும் டொயோட்டாவின் ஃபார்ட்சூனர் கார்களுக்கான தீவிர போட்டியாளராக புதிய கார் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே என கூறப்படுகிறது. எனவே, புதிய காரானது ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை கொண்டு, பாடி மற்றும் ஃப்ரேம் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மோனோகோக் (Monocoque) எஸ்யுவி ஆக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே பாணியில் தான் ஹுண்டாயின் க்ரேட்டா மற்றும் கியாவின் செல்டோஸ் கார் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஹுண்டாயின் ஆஃப் ரோடர் எப்படி இருக்கும்?
புதிய ஆஃப் ரோடருக்கு ப்ராண்ட் சார்பில் சீனாவில் விற்பனை செய்யப்படும், டக்சன் ஆல்-வீல் ட்ரைவ் கொண்ட நீண்ட வீல்பேஸ் பெற்ற எடிஷனை ஹூண்டாய் நிறுவனம் பரிசீலிக்கலாம், அதேநேரம் இந்தியாவிற்கு முற்றிலும் மாறுபட்ட மேற்புற அமைப்பு வழங்கப்படலாம். மாறாக, இது சந்தையின் அதிக பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்த திட்டமிட்டால், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளில் விற்கப்படும் சாண்டா ஃபே AWD காரையும் கருத்தில் கொள்ளலாம். ஆனால், விற்பனையில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் ப்ரீமியம் பிரிவை நோக்கி நகர்வதை தவிர்ப்பது நல்ல முடிவாக இருக்கும்.
ஹுண்டாய் ஆஃப்-ரோடர் - எதிர்பார்ப்புகள்
எஸ்யுவி ஆனது வாங்குபவர்களை ஈர்க்கும் விதமாக பொதுவான அனைத்து சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் அம்சங்களையும் பெறக்கூடும். பவர்டிரெய்ன்களை பிளாட்ஃபார்ம் ஸ்டேபிள்மேட்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதன்படி காரில் ஆல் வீல் ட்ரைவ் அம்சம் கிடைப்பது SUV சில ஆஃப்-ரோடு திறன்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும், 2027-28 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய ஆஃப் - ரோட் கார் சந்தை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெகுஜன மக்களுக்கான ஆஃப்-ரோட் பிரிவில் மஹிந்த்ரா நிறுவனத்தின் தார் மற்றும் தார் ராக்ஸ் கார் மாடல்கள் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுபோக மாருதியின் சுசூகி ஜிம்னி, ஃபோர்ஸ் கூர்கா, டொயோட்டா ஃபார்ட்சூனர் உள்ளிட்ட சில கார்கள் இந்த பிரிவில் இருந்தாலும், அவற்றால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் ஆஃப் ரோட் கார் பிரிவில் பெரும் இடைவெளி உள்ளது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே, ஹுண்டாயின் தற்போதைய திட்டமாக உள்ளது. அதன்படி, பிரதான போட்டியாளர்களான தார் மற்றும் ராக்ஸ் மாடல்களை எதிர்கொள்ளும் விதமாக, போட்டித்தன்மை மிக்க விலையுடன் ஹுண்டாயின் புதிய ஆஃப் ரோடர் எஸ்யுவி சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















