Hero Xtreme 125R: நாளை வெளியாகிறது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மாடல் - கசிந்த புகைப்படங்கள், புதிய அம்சங்கள் என்ன?
Hero Xtreme 125R: ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 125R மாடல் மோட்டார் சைக்கிள் நாளை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Hero Xtreme 125R: ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 125R மாடல் மோட்டார் சைக்கிள் விலை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Hero Xtreme 125R மோட்டார்சைக்கிள்:
ஹீரோ நிறுவனம் 125சிசி செக்மெண்டில் புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக, கடந்த ஆண்டு மத்தியிலேயே பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள ஹீரோ வேர்ல்ட் நிகழ்வில் அந்நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வமாக வெளியிட தயாராக உள்ளது. இதனிடையே, இன்றே அந்த மாடலுக்கான புகைப்படங்கள் கசிந்துள்ளன. புகைப்படத்தின்படி புதிய மாடலின் பெயர் எக்ஸ்ட்ரீம் 125ஆர் என குறிப்பிடப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் ஹீரோ டிவிஎஸ் ரைடர் , பஜாஜ் பல்சர் என்எஸ்125 மற்றும் ஹோண்டா எஸ்பி125 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hero Xtreme 125R வடிவமைப்பு:
எக்ஸ்ட்ரீம் 125ஆர் மாடல் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், வெளியான புகைப்படங்களின்படி பல தகவல்கள் கணிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பைக் ஒரு பெரிய பெட்ரோல் டேங்குடன் ஸ்போர்ட்டி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பெரிய கவசங்களால் சூழப்பட்டுள்ளது. கவாஸாகி இசட்1000 மற்றும் புதிய ஹோண்டா சிபி1000 ஹார்னெட் மாடல்களில் இருப்பதை போன்று, ஆக்ரோஷமான தோற்றமுடைய எல்.ஈ.டி., முகப்பு விளக்கு இடம்பெற்றுள்ளது. ஆனாலும், மேலே உள்ள இரட்டை பைலட் LED விளக்குகள் இந்த மோட்டார்சைக்கிளுக்கு அதன் சொந்த அடையாளத்தை வழங்குகின்றன. நேர்த்தியான LED இண்டிகேட்டர்களும் தனித்துவத்தை அதிகரிக்கிறது.
இன்ஜின் விவரங்கள்:
பிரீமியம் உணர்வை அதிகரிக்க வெள்ளி நிற பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பிலிட் இருக்கை அமைப்பு இதன் ஸ்போர்ட்டி லுக்கை அதிகரித்துள்ளது. எக்ஸாஸ்ட் இளமையாகத் தெரிவதோடு மற்ற ஹீரோ 125சிசி செக்மெண்ட் மோட்டார்சைக்கிளில் இருந்து வேறுபட்டடுள்ளது.
இன்ஜின் விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்த பைக் தற்போதுள்ள ஹீரோ கிளாமர் போன்ற மாடல்களில் இருந்து இன்ஜினை பகிர்ந்து கொள்வதை கசிந்த புகைப்படம் மூலம் கூறப்படுகிறது. அந்த இன்ஜின் 10.8hp மற்றும் 10.6Nm ஆற்றலை வெளிப்படுத்தும். இருப்பினும், ஹீரோ இந்த எக்ஸ்ட்ரீம் மாடலை 11.4 ஹெச்பி ஆற்றலை வழங்கும் ஸ்போர்ட்டி டிவிஎஸ் ரைடருக்கு எதிராகப் போட்டியிட செய்வதால், இன்ஜினில் ஒரு சிறிய மாற்றம் இருக்கலாம். இது முற்றிலும் புதிய சேஸியஸை கொண்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உயரமான வால் பகுதியுடன், பின்புற சப்ஃப்ரேம் நிச்சயமாக ஹீரோவின் தற்போதைய 125களில் இருந்து வேறுபட்டுள்ளது. சஸ்பென்ஷன் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் மூலம் கையாளப்படுகிறது. பைக்கில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது.
விலை விவரங்கள்:
TVS Raider விலை இந்திய சந்தையில் ரூ. 95,000-1.03 லட்சம் வரை உள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மாடலின் விலை சற்றுக் குறைவாக இல்லாவிட்டாலும், இதேநிலையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த நிகழ்வில் நிறுவனம் Mavrick 440 மாடல் மோட்டார்சைக்கிளையும் வெளியிட உள்ளது. எதிர்பாராத ஆச்சரியங்கள் தரும் சில அறிவிப்புகளையும், நாளைய நிகழ்ச்சியில் ஹீரோ நிறுவனம் வெளியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.