Maruti SUV: நம்பர் ஒன் இடத்தை தட்டிப்பறித்த மாருதி.. எஸ்.யு.வி. கார் விற்பனையில் மஹிந்திராவை ஓரம் கட்டி புதிய மைல்கல்..!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, மாருதி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி விற்பனையில் மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, மாருதி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
எஸ்யுவி-க்கு டிமேண்ட்:
ஆட்டோமொபைல் சந்தையில் இன்றைய தேதிக்கு மிகவும் பிரபலமான வார்த்தை என்றால் அது எஸ்யுவி (SUV). sport utility vechile என்பது தான் இதன் அர்த்தம். அதாவது காண்போரை கவரக்கூடிய அழகான வடிவமைப்பு, கூடுதல் சிறப்பம்சங்கள் ஆகிய சாதாரண காருக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெறும். அதோடு, மட்டுமின்றி மோசமான மற்றும் கரடுமுரடான சாலைகளில் கூட எளிமையாக பயணம் மேற்கொள்ளளும் வகையிலான, கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற ஸ்போர்ட்ஸ் வாகனங்களுக்கான திறன்களையும் கொண்டது தான் எஸ்யுவி. இந்நிலையில் தான், கடந்த 6 மாதங்களாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதலிடத்தில் இருந்த மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, மாருதி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.
1.81 லட்சம் யூனிட் விற்பனை:
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 1.81 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த சில மாதங்களில் அறிமுகமான பிரேஸ்ஸா, கிராண்ட் விடாரா, ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய மாடல்கள் மாருதி நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளன. கடந்த ஜுலை மாதம் நாட்டில் விற்பனையான மொத்த எஸ்யுவி கார்களில் 25 சதவிகிதம் இந்த நிறுவனத்தை சேர்ந்தது தான். இப்படிபட்ட விற்பனையை மாருதி நிறுவனம் எட்டுவது இதுவே முதல்முறை. இதன் மூலம் நாட்ட்ன் மிகப்பெரிய எஸ்யுவி கார் உற்பத்தியாளர் எனும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
நாட்டின் பெரிய எஸ்யுவி உற்பத்தியாளர்:
சிறிய கார் மாடல் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்த மாருதி நிறுவனம் தற்போது நாட்டின் மிகப்பெரிய எஸ்யுவி உற்பத்தியாளராக மாறியுள்ளது. கடந்த ஆண்டு வரை எஸ்யுவி கார் உற்பத்தியாளர் பட்டியலிலேயே இல்லாத அந்நிறுவனம் தற்போது அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் 46 ஆயிரத்து 510 எஸ்யுவி கார்களை விற்று, நாட்டின் மொத்த எஸ்யுவி விற்பனையில் 25 சதவிகிதத்தை தனதாக்கியுள்ளது.
கார் விவரங்கள்:
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, பிரேஸ்ஸா கார் 16 ஆயிரத்து 453 யூனிட்களும், ஃப்ரான்க்ஸ் கார் 13 ஆயிரத்து 220 யூனிட்களும், ஜி விட்டாரா 9 ஆயிரத்து 79 யூனிட்களும், ஜிம்னி 3 ஆயிரத்து 778 யூனிட்களும், இக்னிஸ் 3 ஆயிரத்து 223 யூனிட்களும், இன்விக்டோ 757 யூனிட்களையும், மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் பின்னடைவு:
கடந்த 6 மாதங்களாக எஸ்யுவி விற்பனையில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்த மஹிந்திரா நிறுவனம், ஜுலை மாதம் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, ஜுலை மாதம் மஹிந்திரா நிறுவனம் 35,845 யூனிட்களை விற்று, 21% சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனர் 32,991 யூனிட்களை விறு 19% சந்தை பங்களிப்பையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 16% சந்தைப் பங்களிப்புடன் 28,147 எஸ்யுவி யூனிட்களையும் விற்பனை செய்துள்ளனர்.