GST-யால் குறைந்தது ABS-ஆல் ஏறுது.! ஜனவரி முதல் ABS கட்டாயம்; இருசக்கர வாகனங்கள் விலை உயர வாய்ப்பு
ABS Mandatory in Two Wheeler: 2026 ஜனவரி முதல் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம் என்பது அமலாவதால், வாகனங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி-யால் குறைந்த விலை இப்போது வேறு விதமாக ஏறுகிறது.

சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக, வரும் ஜனவரி 2026 முதல், அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் ABS மற்றும் இரண்டு BIS-சான்றளிக்கப்பட்ட தலைக் கவசங்களை இந்தியா கட்டாயமாக்க உள்ளது. இந்நிலையில், இதன் காரணமாக, இருசக்கர வாகனங்களின் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கட்டாயமாக்கப்படும் ABS மற்றும் ஹெல்மெட்டுகள்
வரும் ஜனவரி 2026 முதல், இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய இருசக்கர வாகனமும், அதாவது அனைத்து எஞ்சின் அளவுகள் மற்றும் வகைகளிலும், கட்டாயமாக ABS எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இரண்டு BIS-சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்களுடன் வரும்.
பைக் மற்றும் ஸ்கூட்டர்களால் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுப்பதில் ஒரு முக்கிய படியாக, அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சவாரி செய்பவருக்கு ஒரு தலைக்கவசமும், பின்னால் அமர்ந்து செல்பவருக்கு ஒரு தலைக்கவசமும் என புதிய வாகனங்களுடன் இரு தலைக்கவசங்கள் வழங்கப்படும்.
ABS என்பது என்ன.?
ABS, அதாவது ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(Anti Lock Breaking System) என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும், இது திடீர் அல்லது கடினமான பிரேக்கிங்கின் போது வாகனத்தின் சக்கரங்கள் பூட்டப்படுவதை(Lock/Jam) தடுக்கிறது. புரியும்படி சொல்லவேண்டுமென்றால், இந்த டெக்னாலஜியின்படி, நாம் பிரேக்கை அழுத்தும்போது, அது டிஸ்க்கை தொடர்ச்சியாக பிடித்துக்கொண்டிருக்காமல், விட்டுவிட்டு பிடிக்கிறது. இதனால், பிரேக் லாக் ஆகாமல் தடுக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம், ஈரமான அல்லது சீரற்ற சாலைகளில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, ஏபிஎஸ் ஒரு உயிர் காக்கும் தொழில்நுட்பம் என்றே கூறலாம். ஏனென்றால், சிறிய சறுக்கல் கூட பெரிய காயங்களுக்கு வழிவகுத்துவிடும். அனைத்து பைக் மற்றும் ஸ்கூட்டர்களிலும் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படுவதன் மூலம், சாலை விபத்துகளை கணிசமாகக் குறைப்பதற்கும், அவசரகால பிரேக்கிங் சூழ்நிலைகளின் போது, சவாரி செய்பவரின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹெல்மெட்டுகளுக்கு BIS சான்று என்பது என்ன.?
தலைக்கவசங்களுக்கு BIS சான்று என்பது, இந்திய தரநிலைகள் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு தலைக்கவசங்கள் ஆகும். அவை, கடுமையான பாதுகாப்பு, நீடித்த உழைப்பு மற்றும் தாக்க-எதிர்ப்பு தேவைகளை அந்த தலைக்கவசங்கள் பூர்த்தி செய்வதை உறுதி செய்கின்றன. மலிவான அல்லது தரமற்ற தலைக்கவசங்களை போலல்லாமல், BIS-சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்கள், அதிர்ச்சி உறிஞ்சுதல், ஷெல் வலிமை, பட்டையின் தரம் மற்றும் தலையில் ஏற்படும் காயங்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றிற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள், அதிக தாக்க மோதல்களைத் தாங்கும் மற்றும் இந்திய சாலைகளில் உண்மையான பாதுகாப்பை வழங்கும் என்பதை உறுதி செய்கிறது.
போக்குவரத்து இறப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் இருசக்கர வாகனங்கள்
இந்தியாவின் போக்குவரத்து இறப்புகளில் அதிக பங்கை கொண்டிருப்பது இரு சக்கர வாகனங்களே. அதனால், இந்த புதிய விதிகள், அடிப்படை பாதுகாப்பு தரங்களை வலுப்படுத்துதல், விபத்துகளின் தாக்கத்தைக் குறைத்தல் மற்றும் தடுக்கக்கூடிய தலை காயங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளன. இந்திய சாலைகளை, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் சாலைகளில் ஏற்படும் இறப்புகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 44 சதவீதம் பேர். அதோடு முக்கியமாக, இந்த இறப்புகளில் பெரும்பாலானவை ஹெல்மெட் அணியாததால் தலையில் ஏற்படும் காயங்களால் ஏற்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
வாகனங்களின் விலை உயருமா.?
புதிய விதிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் அதே சமயம், சில இருசக்கர வாகனங்களின் விலையையும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, 125 CC-க்கு கீழ் உள்ள தொடக்க நிலை பைக்குகளில் விலை உயர்வு இருக்கலாம். ஏபிஎஸ் வன்பொருள் மற்றும் இரண்டு சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளின் கூடுதல் விலை, சில ஆயிரம் ரூபாய் விலையை உயர்த்தக்கூடும். இந்த விலை உயர்வு, 5 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், இந்த குறுகிய கால செலவு அதிகரிப்பை விட, குறைந்த விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் அடிப்படையில் நீண்டகால நன்மைகள் மிக அதிகம் என்று அரசு நம்புகிறது.
இதனிடையே, அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் பொருத்தும் வகையில், நிறுவனங்களின் தயார் நிலையை கருத்தில் கொண்டு, அது அமலாகும் தேதியை மாற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், ஏபிஎஸ்-க்கு தேவையான உதிரி பாகங்களின் தயார்நிலை மற்றும் விலை ஆகியவை இதில் அடங்கியுள்ளதால், அது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




















