Royal Enfield: ஒன்னில்லை, ரெண்டில்லை.. 4 புது பைக்குகளை கொண்டு வரும் ராயல் என்ஃபீல்ட், EV தொடங்கி புல்லட்
Royal Enfield Upcoming Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து 4 மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Royal Enfield Upcoming Bikes: ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள 4 மோட்டார் சைக்கிள்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்குகள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை வலுவாக்கும் விதமாக, 4 புதிய பைக்குகளை அடுத்த 12 மாதங்களில் சந்தைப்படுத்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் புதிய 650சிசி மாடல்கள் மற்றும் ப்ராண்டின் முதல் மின்சார வாகனமும் அடங்கும். அதுபோக ஃப்ளாக்ஷிப் வாகனமாக வரவுள்ள ஹிமாலயன் 750 எனும் அட்வென்சர் வாகனமும் இதில் தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்நிலையில் இந்த 4 வாகனங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் என்ஃபீல்டின் 4 புதிய பைக்குகள்:
1. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 650
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது 650சிசிசி செக்மெண்டை விரிவுபடுத்தும் வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் புல்லட் 650 மாடலை சந்தைப்படுத்த உள்ளது. அண்மையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வாகனமானது, புல்லட்டின் அடையாளமான மினிமலிஸ்டிக் ரெட்ரோ டிசைனை கொண்டிருந்தாலும், பாரலெல்லர் ட்வின் இன்ஜினை கொண்டுள்ளது. அதன்படி மிகவும் பிரபலமான 648சிசி இன்ஜினை கொண்டு, 47bhp மற்றும் 52Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்-அசிஸ்ட் க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இதன் ஸ்டைலிங்கானது க்ளாசிக்காகவே தொடர்கிறது. அதன்படி, வட்டமான முகப்பு விளக்கு, பின்ஸ்ட்ரைப்ட் டேங்க், அதிகப்படியான மெட்டல் மற்றும் கம்பீரமான தோற்றம் ஆகியவை அப்படியே தொடர்கிறது. வாகனத்தின் ஃப்ரேமானது ட்வின் இன்ஜினை கையாளும் விதமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது. க்ளாசிக் 650 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ள, புல்லட் 650 எடிஷனின் விலை சுமார் ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
2. ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 650
ப்ராண்டின் 125வது ஆண்டை கொண்டாடும் விதமாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ப்ராண்டின் க்ளாசிக் 650 மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அண்மையில் காட்சிப்படுத்தியது. ஒளியைப் பொறுத்து சிவப்பு மற்றும் தங்க நிறங்களுக்கு இடையில் "ஹைப்பர்ஷிஃப்ட்" வண்ணப்பூச்சு மாற்றங்கள் மற்றும் எக்ஸாஸ்ட் முதல் இன்ஜின் உறைகள் & ஸ்போக் வீல்கள் வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு வெளிப்புற கூறுகளும் ஆழமான கருப்பு நிறத்தில் முடிக்கப்பட்டுள்ளன. இதிலும் அதே 648 சிசி ட்வின் இன்ஜின் உள்ளது. அதன் வழக்கமான நிலையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தோற்றம் மற்றும் லிமிடெட் எடிஷன் ஆகியவை இந்த வாகனத்தை தனித்துவமாக மாற்றுகிறது. இது RE ப்ராண்டிலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றாகும்.
3. ராயல் என்ஃபீல்ட் Flying Flea C6
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார்சைக்கிளான Flying Flea C6, ப்ராண்டின் வரலாற்று சிறப்புமிக்க ஏர்போர்ன் பாராட்ரூப்பர் பைக்கை பிரதிபலிக்கிறது. எளிமை மற்றும் சுறுசுறுப்பில் கவனம் செலுத்தி இலகுரக கட்டமைப்பை இலக்காக கொண்டு எடை குறைந்த அலுமினிய கூறுகள் மற்றும் சிறிய பேட்டரி கேஸ் உடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் எளிமையான வடிவமைப்பானது கிர்டர் ஸ்டைல் முன்புற அமைப்பு மற்றும் தூய பாடி வர்க்குடன் ப்ராண்டின் தற்போதைய எந்த பைக்கிலும் இல்லாத நியோ ரெட்ரோ தோற்றத்தை வழங்குகிறது. பல்வேறு அம்சங்களை கொண்டு 2026 நிதியாண்டில் இந்த வாகன உற்பத்தி தொடங்கும் என கூறப்படுகிறது.
3. ராயல் என்ஃபீல்ட் Flying Flea S6
C6 ப்ராண்டின் ஒரு தூய்மையான வாகனமாக இருந்தால், அதன் அட்வென்சர் சகோதரராக Flying Flea S6 இருக்கும். சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனமானது, ஸ்க்ராம்ப்ளரை அடிப்படையாக கொண்டு நீளமான சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ளது. மேலும், கம்பீரமான தோற்றம் மற்றும் டூயல் பர்பஸ் வீல்ஸ் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. சிறந்த ஃப்ரேம் மற்றும் மிகவும் கரடுமுரடான தோற்றத்தைக் கொண்டுள்ளது மற்றும் 2026 இறுதிக்குள் வெளியிடப்படுவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது C6 உடன் பேட்டரி பேக்கை பகிர்ந்து கொள்ளும்.






















