1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
ஒரே சார்ஜில் 1200 கி.மீ ரேஞ்ச்.. புது பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்.யு.வி கார்கள்: BYD, JSW, MG மாடல்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், சார்ஜிங் மற்றும் ரேஞ்ச் குறித்த வாடிக்கையாளர்களின் கவலையைப் போக்க பிளக்- இன் ஹைப்ரிட் (PHEV) எஸ்.யு.வி. கார்கள் அறிமுகமாக உள்ளன.
இந்த கார்கள் எலக்ட்ரிக் கார்களில் குறைந்த விலையிலும் பெட்ரோல் கார்களில் நீண்ட மைலேஜையும் பெற விரும்புவோருக்கு பெஸ்ட் சாய்ஸ்.
JSW, MG மோட்டார்ஸ் மற்றும் BYD ஆகிய நிறுவனங்கள் சுமார் 1200 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கக்கூடிய புதிய கார்களை களமிறக்க தயாராகி வருகின்றன. இதில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 2 மின் மோட்டார்கள் மற்றும் பெரிய பேட்டரி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கார்களின் வடிவமைப்பு மற்றும் ரேஞ்ச் குறித்த தொழில்நுட்ப விவரங்கள் பின்வருமாறு:
BYD Seal U (பிஒய்டி சீல் யு):
- வடிவமைப்பு: இந்த எஸ்.யு.வி மாடலானது, பிஒய்டி நிறுவனத்தின் ஓஷன் ஏஸ்தெட்டிக்ஸ் டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் நேர்த்தியான C-வடிவ எல்.இ.டி ஹெட்லைட்டுகள், ஸ்போர்ட்டியான பம்ப்பர்கள் மற்றும் பக்கவாட்டில் 19 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- உட்புறம்: காரின் கேபின் பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்6 இன்ச் அளவில் சுழலும் வகையிலான பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் இரண்டு வயர்லெஸ் சார்ஜிங் பேடுகள் இடம்பெற்றுள்ளன.
- ரேஞ்ச்: பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் பேட்டரி என இரண்டும் இணைந்து செயல்படும் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம், இந்த கார் ஒட்டுமொத்தமாக 1200 கிலோமீட்டருக்கும் அதிகமான சிறப்பான ரேஞ்சை வழங்குகிறது.
MG Starlight (எம்ஜி ஸ்டார்லைட்):
- வடிவமைப்பு: JSW மோட்டார்ஸ் கூட்டணியில் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஸ்டார்லைட் எஸ்.யு.வி, சிறப்பான ஏரோடைனமிக் தோற்றத்தைக் கொண்டுள்ளது. கூர்மையான எல்.இ.டி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், அகலமான முன்புற கிரில் மற்றும் நேர்த்தியான பின்புற வடிவமைப்பு என வெளிப்புறம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
- உட்புறம்: உட்புறம் மிகவும் எளிமையான அதேசமயம் மாடர்ன் மினிமலிஸ்ட் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் ADAS எனப்படும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
- ரேஞ்ச்: முழுமையாக பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு, எரிபொருளும் நிரப்பப்பட்ட நிலையில், இந்த எம்ஜி ஸ்டார்லைட் கார் அதிகபட்சமாக 1100 முதல் 1200 கி.மீ வரையிலான ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது.
இவைபோக MG new Starlight 560, JSW மோட்டார்ஸ் Jetour T2, மற்றும் BYD லெப்பார்ட் 8 ஆகிய மாடல்களும் ஹைபிரிட் பிளக் இன் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.
எரிபொருள் மற்றும் பேட்டரி என இரண்டிலும் இயங்கும் இந்த வாகனங்கள், சார்ஜிங் நிலையங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை குறைத்து, நீண்ட தூர பயணங்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு வீட்டிலும் சார்ஜ் போடலாம், சார்ஜிங் ஸ்டேஷனிலும் போடலாம். எலக்ட்ரிக் மோடில் நீண்ட நேரம் இயங்கும் இந்த கார்கள், பேட்டரி குறைந்ததும் தானாகவே பெட்ரோலில் இயங்கத் தொடங்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்























