Velliangiri : வெள்ளியங்கிரி மலை ரகசியங்கள் தெரியுமா? சிறப்பு தெரியுமா? சத்குரு வார்த்தைகளில்..
வெள்ளியங்கிரி மலை ஏன் புனிதமானது? என்று விளக்கியுள்ளார் சத்குரு.
வெள்ளியங்கிரி மலை ஏன் புனிதமானது? என்று விளக்கியுள்ளார் சத்குரு.
ஒரு மலை ஏன் புனிதமானதாகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? அது வெறும் மணல், கல் குவியல் தானே. ஒரு சிறு குவியல் என்றால் அது சமாதி. அதுவே பெரிய குவியல் என்றால் அது மலை. ஒரு மலையின் உச்சிக்கு ஏற வேண்டுமானால் நம் கால் கடுக்க பயணிக்க வேண்டும். அதுதான் நம்மை ஒரு மலையைப் பார்த்து பிரமிக்க வைக்கிறதா? ஒரு வகையில் அது உண்மையும் கூடத்தான். ஒரு மலையை எளிதாக கடக்க முடியும் என்றால் நாம் அதைப் பார்த்து நாம் பிரம்மித்திருக்க மாட்டோம். அதன் உச்சியை அடைய நம் உயிர்பலத்தை அது உறிஞ்சுவதாலேயே நாம் அதைப் பார்த்தும் பிரம்மிக்கிறோம்.
நான் இந்த மலையைப் புனிதமாகக் கருதுகிறேன். ஆனால் அது அடையக் கடினமானது என்பதால் நான் அப்படிக் கருதவில்லை. கடினமானதை எல்லாம் புனிதமாகக் கருதுபவன் அல்ல நான்.
எனக்கு ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் புனிதமானது. வாழைப்பழம் சாப்பிடுவது அவ்வளவு கடினமானதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மூன்று நாள் பட்டினி கிடந்துவிட்டு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது புனிதமானதாகவே தெரியும். ஏதன் மீதாவது உங்களின் பார்வையைக் குவித்து அர்த்தம் பெற உங்களுக்கு ஒரு பயிற்சி தேவைப்படும். வாழைப்பழத்தின் மகிமையை உணர வேண்டுமானால் மூன்று நாட்களாவது பட்டினி கிடந்தால் தான் தெரிகிறது. அதைப் போல் இந்த மலையில் புனிதத்தன்மையை நீங்கள் உணர வேண்டுமென்றாலும் உங்களை நீங்கள் அதற்காக தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களுக்குப் புரியாது.
மலை எப்படி உருவானது என்பதை அடிப்படை அறிவியல் அறிவு இருந்தாலே புரிந்து கொள்ளலாம்.
எனக்கு இந்த மலை ஏன் புனிதமென்றால் இந்த மலையில் என் குரு நடந்து திரிந்திருக்கிறார். என் குரு என்னிடம் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தாரோ அவர் என்னிடம் நான் செய்வதுபோல் பிரசங்கம் பண்ணவில்லை. என்னிடம் சொல்ல வேண்டியதை இந்த மலை உச்சியில் அவர் விட்டுச் சென்றுள்ளார்.
முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு பெண் இருந்தார். தென்னிந்தியாவின் கோடியில் அவர் இருந்தார். அவர் சிவனின் கரம் பற்ற விரும்பினார். நம்மைப் போல் அவர் பாதம் பணிய விரும்பவில்லை. அவர் சிவனை மணவாளனாக ஆக்க நினைத்தார். அதற்காக அவர் தன்னை தயார் படுத்தினார். அவர் சிவன் மீது கொண்ட பக்தி எல்லைகளைக் கடந்து சென்றது. அணுதினமும் ஒவ்வொரு நொடியும் சிவனுக்காகவே வாழ்ந்தார். அதனால் அசைக்கப்பட்ட சிவபெருமான் பூமிக்கு பயணப்பட்டார். ஆனால் மற்ற கடவுளர் சதி செய்தனர். அவர்கள் ஒரு தென்னிந்திய பெண் சிவனுக்கு மனைவியாக வருவதை விரும்புவதில்லை. ஆனால் அந்தப் பெண்ணோ பொழுது புலர்வதற்குள் சிவன் என் கரம் பற்ற வரவில்லை என்றால் நான் என் உயிரை உடலிலிருந்து பிரித்துவிடுவேன் என்று சவால்விட்டார். அந்தப் பெண் அப்போது யோகினி நிலையை எட்டியிருந்ததால் அந்த காரியத்தைச் செய்யும் பலனைப் பெற்றிருந்தார்.
அதை அறிந்த சிவ பெருமான் தனது பயணத்தை துரிதப்படுத்தினார். ஆனால் அந்தத் திருமணத்தைத் தடுக்க சதி செய்த மற்ற கடவுளர், போலியாக சூரிய ஒளியை வரச் செய்தனர். தான் தோற்றுப்போனதாக உணர்ந்த சிவன் சிவலோகம் திரும்பினார். சிவன் வராததால் தான் சொன்னதுபோலவே அந்த யோகினி உடலிலிருந்து உயிரைப் பிரித்தார். அந்தப் பெண் இன்றும் கன்னியாகுமரியாக நின்று கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் சிவன் மிகுந்த ஏமாற்றமடைந்தார்.
ஒரு பக்தையின் வாஞ்சையை நிறைவேற்ற முடியாது திரும்பிய சிவன் தனது ஏமாற்றத்திலிருந்து விடுபட சிவன் இந்த மலையில் அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் எவ்வளவு காலம் என்று தெரியாது. அது தான் வெள்ளியங்கிரி மலை. இதை தென்னகத்தில் இமயம் எனக் கூறுகின்றனர். இமாலயத்துடன் ஒப்பிடும் அளவிற்கு இந்த மலை பிரம்மாண்டமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் புனிதத்தில் இமையத்தில் சற்றும் சளைத்தது அல்ல.
இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.