திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்புக்கு காரணம் இது தான்!
திருப்பதியில் வரும் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் வரும் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ளும் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் நடைபெறவுள்ளதால் இந்த அறிவிப்பைத் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வரும் நவம்பர் 15 அன்று திருப்பதியில் தென் மாநிலங்களின் கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்குபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகியவற்றின் ஆளுநர்களும் கலந்துகொள்ளப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதால் திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருப்பதியில் விஐபி தரிசனம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தால், கோயிலில் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இந்தக் குறைபாடுகளைச் சமாளிக்கவும், பாதுகாப்பு நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காகவும், திருப்பதியில் கோயிலுக்கு வரும் விஐபிகள் சிறப்புத் தரிசனம் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்தும் திட்டத்தைத் திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், `வரும் நவம்பர் 13,14,15 ஆகிய தேதிகளில் தென் மாநிலங்களின் கவுன்சில் கூட்டம் நடைபெறுவதால் பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். எனவே திருமலைக் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. விஐபி தரிசனம் வேண்டும் எனக் கோரி நவம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் கடிதம் அனுப்புவதையும் ஊக்குவிக்க முடியாது. பக்தர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ஏற்று அதன்படி நடந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
தெற்கு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கவும், மத்திய அரசு தலையிட்டு சரிசெய்ய வேண்டிய விவகாரங்கள் முதலானவை வரும் நவம்பர் 14 அன்று திருப்பதியில் நடைபெறவுள்ள தென் மாநிலங்களின் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் உள்ள நதி நீர் விவகாரங்கள், எல்லையோரப் பிரச்னைகள், நதி நீர் இணைப்பு விவகாரம் முதலானவை இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.