திருவண்ணாமலை : 2 ஆண்டுகளுக்கு பிறகு பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி.. கிரிவலம் செல்ல உகந்த நேரம் தெரியுமா?
திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பௌர்ணமி கிரிவலம் செல்ல அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மேலும் பௌர்ணமி கிரிவலம் செல்ல முயலும் பக்தர்களை தடுக்க, கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பக்தர்கள் செல்லாத வகைகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கிரிவலம் செல்வதற்கான தடை உத்தரவு மட்டும் தொடர்ந்து அமலில் இருந்துவந்தது.இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்துக்கு மட்டும் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வகத்தால் அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயத்தில், மகா தீபத்தைத் தொடர்ந்து வந்த பௌர்ணமி நாளிலும் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபட்டனர்.
அதன்பிறகு வந்த பௌர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மீண்டும் தடை விதித்தார். அதேநேரத்தில், ஆட்சியரின் தடை உத்தரவை மீறி பல்லாயிரகணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அவர்களை தடுத்து வந்தனர் காவல்துறையினர். ஆனாலும் பக்தர்கள் மேலும் கிரிவலப்பாதையில் உள்ள வெவ்வேறு வழிகளில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. தமிழகம் இயல்பு நிலையில் உள்ளபோது பௌர்ணமி கிரிவலத்துக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுப்பப்பட்டது.
மேலும் பங்குனி மாத பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்ல தடை விதிக்கக்கூடாது என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் வலியுறுத்தி இருந்தனர்.இந்தநிலையில், பௌர்ணமி கிரிவலத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பௌர்ணமி கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள், பௌர்ணமி கிரிவலம் செல்லலாம்.
மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பங்குனி மாத பௌர்ணமி 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் 17-ம் தேதி பகல் 1.40 மணிக்கு துவங்கி 18-ம் தேதி பகல் 1.20 மணிக்கு கிரிவலம் நிறைவடைகிறது.
எனவே பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்காததால் தற்போது கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதால் இந்த முறை அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.