பிபின்ராவத் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மோட்சதீபம்
ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு வேலூர் கோட்டையினுள் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது
கடந்த 8-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் எதிர்பாராத விதமாக நடந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய அஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையினுள் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மோட்ச தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டது. கனமழை பெய்ததன் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்ததால் நேற்று வரை பக்கதர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் ராட்சத மோட்ட்டார் மூலம் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே ஜலகண்டேஸ்வரர் ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பாக இன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையும் விதமாகவும் கோவில் வளாகத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் உருவப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
கோவிலில் முப்படை தளபதிக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுவதை கண்ட கோயிலுக்கு வழிபட வந்த பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பக்தர்கள் பலரும் தாமாக முன்வந்து நம் நாட்டின் இராணுவ வீரர்களுக்கு ஆஞ்சலி செலுத்த ஆர்வம் காட்டி இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மேலும் இது போன்ற துயர சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்கவும் வேண்டிக்கொண்டு பிபின் ராவத் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செய்து வணங்கி சென்றனர்.
மோட்ச தீபம் என்பது உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆன்மீக முறைப்படி செய்யப்படும் ஒரு வழக்கம் ஆகும். குறிப்பாக விபத்து போன்ற சம்பவங்களில் திடீர் மரணம், அகால மரணம் ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் ஆன்மாவை சாந்தியடைய செய்ய மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் சிவன் கோவில்களில் மட்டுமே மோட்ச தீபம் ஏற்றப்படும். மற்ற கோவில்களில் ஏற்றும் வழக்கம் இல்லை. இதற்கு முன் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்காலம், பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியின், கர்நாடக சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரது மறைவுக்கு வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.