Madurai Atheenam: ஆக.23ல் புதிய மதுரை ஆதீனம் பட்டம் சூட்டும் விழா: நித்யானந்தா ‛டார்ச்சரை’ சமாளிக்க மடாதிபதிகள் அவசரம்!
இதற்காக வரும் 23-ம் தேதி மடத்தில் ஒரு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனத்தின் மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர்.
புதிய ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரானுக்கு மதுரையில் ஆக.23-ல் பட்டம் சூட்டும் விழா: தமிழகம் முழுவதும் இருந்து மடாதிபதிகள் பங்கேற்பு
மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி உடல்நலக் குறைவால்கடந்த 13-ம் தேதி முக்தி அடைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு ஆதீன மடத்தில் அன்றாடப் பூஜைகளை இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவர் ஆதீன சிம்மாசன பீடத்தில் அமரவில்லை. இதனால் ஆதீன சம்பிரதாயங்களின்படி இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக பட்டம் சூட்டப்பட உள்ளார். தற்போது அதற்கான ஏற்பாடுகளை ஆதீன மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இளைய சன்னிதானமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முறைப்படி 2019-ம் ஆண்டே நியமித்துவிட்டார். தற்போது அவர் ஆதீனமாக சிம்மாசனத்தில் அமர உள்ளதால் அவரது பெயர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என்று மாற்றப்பட்டுள்ளது.
இவர் ஆதீனமாவதில் எந்த சிக்கலும் இல்லை. மதுரை ஆதீனம் முக்தியடைந்த பிறகு இயல்பாகவே இளைய சன்னிதானம் மதுரை ஆதீனமாக செயல்படத் தொடங்கிவிட்டார். ஆனால் அவர் ஆதீனமாக சிம்மாசனம் சூட்டப்பட்டு அவரது பீடத்தில் ஏறவில்லை.அதற்கு மடத்தின் வழக்கமான சில பூஜைகள், சடங்குகள் உள்ளன. ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்த 10-வது நாளில் நடக்கும் குரு பூஜைக்குப் பிறகு இளைய சன்னிதானம், மதுரை ஆதீனத்தின் பீடத்தில் முறைப்படி ஏறி ஆதீன மடத்தின் பணிகளை மேற்கொள்வார்.
இதற்காக வரும் 23-ம் தேதி மடத்தில் ஒரு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனத்தின் மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் முன்னிலையில் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக சிம்மாசனம் சூட்டப்பட்டு பீடத்தில் ஏறுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தற்போதைய இளைய சன்னிதானத்துக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பகவதி லட்சுமணன். அவரது தந்தை பெயர் காந்திமதிநாதன் பிள்ளை. தாயார் பெயர் ஜானகி அம்மாள். பகவதி லட்சுமணன் 1954-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி திருநெல்வேலி டவுனில் பிறந்தார். குன்றக்குடி ஆதீனத்தில் 1975-ம்ஆண்டு தம்பிரானாகப் பதவியேற்று, 2 ஆண்டுகள் சமயத் தொண்டும், தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக 5 ஆண்டுகள் சமயத் தொண்டாற்றினார்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் 35 ஆண்டுகள் மூத்த தம்பிரானாக சமய, சைவத் தொண்டாற்றினார். மதுரை ஆதீனத்தில் மறைந்த ஆதீனம் அருணகிரிநாதரால் 2019-ம்ஆண்டு ஜூன் 6-ம் தேதி சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை செய்யப்பட்டு இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டார்.
நித்தியானந்தா ‛டார்ச்சர்’
ஒருபுறம் புதிய ஆதீன ஏற்பாடுகள் இப்போது தான் துவங்கியிருக்கும் நிலையில், அருணகிரிநாதர் முக்தி அடைந்த அன்றே தன்னை அடுத்த ஆதீனமாக அறிவித்தார் நித்தியானந்தா. ஏற்கனவே தன்னை இளைய பீடமாக அருணகிரிநாதர் அறிவித்த புகைப்படங்களை வெளியிட்டு, ஆதீன முறைப்படி தான் தான் புதிய ஆதீனம் என அறிவித்தார். கைலாசாவில் இருந்தபடி அவர் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். எப்படி பார்த்தாலும் நித்தியானந்தா மதுரை வரப்போவதில்லை. தலைமறைவாக இருப்பதால், அது ஆதீன நிர்வாகிகளுக்கு ஆறுதல் . அதே நேரத்தில் ஏற்கனவே மதுரை ஆதீனம்-நித்தியானந்தா வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய ஆதீன நியனம் தொடர்பாக ஏதாவது ஒரு தடையை நித்தியானந்தா பெற்றுவிடுவாறோ என்கிற அச்சம் மடாதிபதிகளுக்கு உள்ளது. வழக்கு தொடர்பாவ விவகாரங்களில் நேரடியாக வரத்தேவையில்லை. வழக்கறிஞர்களை கொண்டே முடித்துவிடலாம் என்பதால், அவசர அவசரமாக புதிய ஆதீன பட்டமளிப்பை மடாதிபதிகள் விரைவு படுத்தி வருகின்றனர். இருந்த போதும், குறைந்த விதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் புதிய ஆதீனம் நியமனம் சற்று தாமதமாகிறது.